இந்தி தெரியாதா? கடன் கொடுக்க முடியாது... வடமாநில வங்கி மேலாளரின் ஆணவப்பேச்சு... தமிழகத்தில் நடந்த அவலம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 21, 2020, 5:14 PM IST
Highlights

வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து லோனுக்கு விண்ணப்பித்து உள்ளார்.  

இந்தி தெரியாதா? லோன் இல்லை என கூறிய வங்கி மேலாளர் மீது மான நஷ்ட ஈடு கேட்டு ஓய்வுபெற்ற மருத்துவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வசித்து வருகிறார் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து இறுதியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள யுத்தப்பள்ளம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். அங்கு அவருக்கு சொந்த நிலம் மற்றும் வீடு உள்ளது. இவர் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்து வரவு-செலவுகளை நிர்வகித்து வருகிறார்.

 

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் கேட்டுள்ளார். வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து லோனுக்கு விண்ணப்பித்து உள்ளார்.  

அப்போது வங்கி மேலாளர், பாலசுப்ரமணியத்திடம், ‘’உனக்கு ஹிந்தி தெரியுமா? என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர்எனக்கு ஹிந்தி தெரியாது ஆனால் தமிழும், ஆங்கிலமும் தெரியும் என பதிலளித்துள்ளார். ஆனால், வங்கி மேலாளரோ, ’’நான் மகாராஷ்டிராவில் இருந்து வருகிறேன், எனக்கு ஹிந்தி தெரியும், மொழி பிரச்சினை என இந்தியில் கூறியுள்ளார். மருத்துவர் மீண்டும் தனது ஆவனங்களை காண்பித்து, இதே வங்கி கிளையில்தான் கணக்கு வைத்துள்ளேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது எனக் கூறியும் வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது எனக் கூறியுள்ளார்.  

மொழி பிரச்சனை காரணமாக அடிப்படை உரிமையை மறுத்து கடன் தர மறுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்து வங்கி மேலாளருக்கு மான நஷ்ட்டஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக நீதிமன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

click me!