
காதலனுடன் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது 3 பேர் ஹரிகிருஷ்ணனை கட்டிப்போட்டு விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
காதல் ஜோடி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (24). அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு சென்றனர். காதலர்களான இவர்கள் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் வாக்குவாதம் செய்தனர். பின்னர், ஹரிகிருஷ்ணனை அடித்து உதைத்து கட்டிப்போட்டு காதலன் கண்முன்னே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பலாத்காரம்
தனது கண்முன்னே தன்னுடைய காதலியை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததால் மனவேதனை அடைந்த ஹரிகிருஷ்ணன் விஷம் குடித்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஷம் குடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தபோதே, கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.
கைது
இதையடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பத்மாஸ்வரன் (24), தினேஷ்குமார் (24), அஜித்குமார் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, காதலன் ஹரிகிருஷ்ணன் விஷம் குடித்த தகவலை அறிந்த கல்லூரி மாணவியும் விஷம் குடித்தார். அவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவியிடம் மாஜிஸ்திரேட்டு மணிமேகலை வாக்குமூலம் பெற்றுள்ளார்.