
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த தெற்கு பிச்சாவரம் பகுதியை சேர்ந்த அந்த மாணவி, தனது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் ஒன்றில் இறந்துவிட்டதால் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் 21 வயதாகும் அந்த மாணவி, தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு, எம். எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
தனது உறவினர் வீட்டில் இருந்து சிறிது காலம் கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார்.
இதனிடையே சிங்கப்பூரில் தங்கி வேலை செய்யும் நரியன்குளத்தை சேர்ந்த ஒருவருக்கு, மாணவி திருமணம் செய்து வைப்பது குறித்து பேசி , உறவினர்கள் முடிவெடுத்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் தான், இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் வீட்டில் பின்புறத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தன்னுடன் படுத்து இருந்த மகள் நீண்ட நேரமாகியும் காணவில்லை என்று தாயார், வீட்டின் பின்புறத்திலுள்ள கொட்டகைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு மாணவி, தூக்கில் தொங்கிய நிலையில் சடமாக கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த தாயார், கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடியுள்ளனர். பின்னர், இறந்த போன மாணவியின் சடலத்தை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொட்டகையில் சோதனை நடத்திய போலீசார், மாணவி தற்கொலை செய்துக்கொண்ட இடத்தில் ஒரு கடிதம் இருப்பதை பார்த்துள்ளனர். இறந்து போன மாணவி எழுதியதாக கூறப்படும் அந்த கடிதத்தில், தான் குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அக்கடிதத்தில், என்னை மன்னிச்சிடு அம்மா. எனக்கு வேற வழி தெரியல. ஒருத்தன் நான் குளிக்கிறதை வீடியோ எடுத்துக்கிட்டு பிளாக்மெயில் பண்றான். அவன்கிட்ட இருந்து தப்பிக்க எனக்கு வேற வழி தெரியலை. என்னை மன்னிச்சிடு. தம்பியை நல்லா பாத்துக்கோ. எனக்கும் ரொம்ப நாள் வாழனும் தான் ஆசை. ஆனால் என்ன பண்ண கடவுள் என்னை வாழ விடலை. எனக்கும் வேற வழி தெரியல என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட எஸ்.பி சக்திகணேசன் கூறும் போது, யார் மிரட்டுகிறார்கள் என்பது குறித்து அந்த கடிதத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. அந்த கடிதம் மீதும், அவர் பயன்படுத்தி வந்த செல்போனையும் கைப்பற்றி விசாரணை செய்துவருகிறோம்” என்றார். இதுக்குறித்து மாணவியின் தாயார் பேசும் போது, மகளைக் காணாமல் வீட்டின் பின்பக்கம் சென்று தேடியபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததாக தெரிவித்தார். மேலும், தன் மகள் கடிதத்தில் குறிப்பிட்டவாறு இந்தச் செயலில் ஈடுபட்டது யார் என்பது தெரியவில்லை என்றும், இது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என்று கேட்டுக்கொண்டார்.