
பெங்களூருவில் தொழிலில் ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது குறித்து கணக் கேட்ட போது சரியாக பதிலளிக்காத மகனை தந்தையே பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொழில் நஷ்டம்
பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஆசாத் நகரில் வசிப்பவர் சுரேந்திரா (51). ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். சொந்தமாக கட்டுமான தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், சுரேந்திரா தான் செய்து வந்த தொழிலை தனது மகன் அர்பித்திடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், தொழிலில் அர்பித் ஒன்றரை கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக கணக்கு கேட்டால் அர்பித் சரியாக பதில் கூறாததால் தந்தை, மகனுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
மகனுக்கு தீ வைத்த தந்தை
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த தந்தை சுரேந்திரா பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் தின்னரை எடுத்து அர்பித் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அர்பித் அங்கும், இங்கும் ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அர்பித் உடலில் பிடித்த தீயை அணைத்தனர்.
தந்தை கைது
படுகாயமடைந்த அர்பித்தை அப்பகுதி மக்கள் மீட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அர்பித் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அர்பித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்திரா கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.