
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஏழாவது செமஸ்டர் படிக்கும் மாணவியை 22 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து இன்ஜினியரிங் மாணவி ஹனுமந்த் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஜீவன் கவுடா என்ற 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் அக்டோபர் 10ம் தேதி நடந்துள்ளது. ஐந்து நாட்களுக்குப் பிறகே மாணவி இந்த தகவலை வீட்டில் தெரிவித்துள்ளார். ஜீவன் கவுடா பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஏற்கனவே அறிமுகமானவர். தேர்வுகளில் தோல்வியடைந்ததால், அந்த மாணவியை விட ஒரு வருடம் பின்தங்கி 22 வயதான அவர் படித்து வந்தார். மதிய உணவு நேரத்தில் படிப்பு சம்பந்தமான மெட்டீரியல்களைப் பெறுவதற்காக ஜீவன் அந்த மாணவியை சந்தித்துள்ளார்.
கல்லூரி ஆண்கள் கழிவறையில் நடந்த வன்கொடுமை
அதன்பிறகு, ஏழாவது மாடியில் உள்ள ஆர்க்கிடெக்சர் பிளாக் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று முத்தமிட முயன்றுள்ளார். மாணவி தடுத்ததால், ஆறாவது மாடியில் உள்ள ஆண்கள் கழிவறைக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த வன்கொடுமைக்குப் பிறகு, மாணவியின் போனையும் ஜீவன் பறித்துச் சென்றுள்ளார். ஆசிரியர்களிடம் நடந்த சம்பவத்தைச் சொல்ல பயந்த அந்தப் பெண், நடந்த கொடூரத்தை பெற்றோரிடம் விளக்கியுள்ளார்.
நான்கு மாதங்களில் 979 பாலியல் புகார்கள்
ஆனால், வன்கொடுமை நடந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கர்நாடகாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும் பாஜக தலைவர் ஆர்.அசோக் விமர்சித்துள்ளார். கடந்த நான்கு மாதங்களில் கர்நாடகாவில் 979 பாலியல் வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.