கோவையில் பட்டப்பகலில் பயங்கரம்..! கத்தியால் சரமாரியாக குத்தி ஆட்டோ ஓட்டுநர் படுகொலை..!

By Manikandan S R SFirst Published Sep 29, 2019, 1:25 PM IST
Highlights

கோவையில் பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே இருக்கும் சரவணம்பட்டி ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் அருண் பிரசாத். வயது 27.  இவர்  ஆட்டோ ஓட்டுனராக தொழில் செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பாக கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கு குடும்பத்துடன் அருண் பிரசாத் குடி பெயர்ந்தார். தினமும் அந்த பகுதியில் அவர் ஆட்டோ ஓட்டி வந்திருக்கிறார்.

சம்பவத்தன்று வழக்கம் போல ஆட்டோவில் சவாரிக்காக சென்றுள்ளார். மதியம் ஒரு மணி அளவில் சரவணம்பட்டி அருகே இருக்கும் கீழநத்தம் ஐடி பார்க் அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு அருண்பிரசாத் நின்றுகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியாக இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அருண்பிரசாத்தின் ஆட்டோ முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்திய அவர்கள் அவருடன் தகராறில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அந்த 2 வாலிபர்களும் அருண்பிரசாத்தை தாக்க தொடங்கியிருக்கின்றனர். அப்போது திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தினர். இதில் கை, மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட அருண்பிரசாத் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதை பார்த்ததும் அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.  தாக்குதலில் பலத்த காயமடைந்த அருண்பிரசாத் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மேலும் தாக்கிய அந்த இரண்டு வாலிபர்களும் சம்பவ இடத்தை விட்டு தப்பிச்சென்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருண் பிரசாத்தை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக அருண்பிரசாத் உயிரிழந்தார்.

அவரை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றவர்கள் இந்தக் கொலை சம்பவம் குறித்து அவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் அருண் பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்த வாலிபர்கள் யார்? என்ன காரணத்திற்கு கொலை நடந்தது என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொலை நடந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!