
சென்னையில் மதுபோதை ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்துவிட்டு செல்பி எடுத்து அந்த வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பி ரசித்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிரபல ரவுடி உள்பட 4 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர்
சென்னை மணலியை அடுத்த பழைய நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் (28). இவரது மனைவி கீர்த்தனா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார். கடந்த 27ம் தேதி அன்று ரவிசந்திரன் வீட்டில் இருந்து தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
தலை நசுங்கிய நிலையில் ஆண் சடலம்
இதனிடையே, மணலி புதுநகர் எம்ஆர்எப் குடியிருப்பு பகுதியில் தலை நசுங்கிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தலை சிதைந்த நிலையில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரன் என்பது உறுதியானது. நண்பர்களுடன் மது விருந்துக்கு சென்ற போது ஏற்பட்ட மோதலில் ரவிசந்திரன் கொல்லப்பட்டதும் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக கார் டிரைவர் மதன் குமார் என்பவரை கைது விசாரித்தனர். மதன் கொடுத்த தகவலின்பேரில் குட்டா (எ) ஜெயப்பிரகாஷ், தனுஷ் , பரத் ஆகியோரை கைது செய்தனர்.
முன்விரோதம்
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. கடந்த 6 மாதங்களுக்கு முன் போதையில் இருந்த ரவுடி ஆறுவிரல் மதனுக்கும் ரவிச்சந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் இருவரும் சமாதானமானதுடன் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். இருப்பினும் மோதல் பிரச்னையை மதன் மறக்காமல் ரவிச்சந்திரனை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற உறுதியுடன் இருந்துள்ளார். இதன்படி, நேற்று முன்தினம் மதியம் மதன் தனது கூட்டாளிகளான ரவிச்சந்திரன், மணலி புதுநகரை சேர்ந்த குத்தா(24), பரத் (26), பப்லு (27) ஆகியோரை மது குடிக்கலாம் என்று கூறி, மணலி புதுநகர் எம்ஆர்எப் குடியிருப்பு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
செல்பி
பின்னர் போதை ஏறியதும் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து ரவிச்சந்திரன் தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அங்கு கிடந்த ஒரு பாறாங்கல்லை எடுத்து தலையில் போட்டு நசுக்கி துடிதுடிக்க கொலை செய்துள்ளனர். ரத்தவெள்ளத்தில் ரவிச்சந்திரன் இறந்ததும் ரவுடி மதன், அந்த காட்சியை தனது செல்போனில் செல்பி எடுத்த வீடியோவை கூட்டாளிகளுக்கு அனுப்பியுள்ளார். இதன்பின்னர் அவர்கள், அந்த செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் ஏராளமானோருக்கு அனுப்பியது தெரியவந்தது.