யூடியூப்பில் பார்த்தபடி குழந்தையை டிரமுக்குள் முக்கி கொன்றேன்... வாக்குமூலத்தில் திடுக் தகவல்கள்

By manimegalai aFirst Published Sep 14, 2018, 10:09 AM IST
Highlights

யூடியூப்பில் கொலை செய்வது எப்படி என வீடியோவை பார்த்து என் இரண்டரை வயது மகளை கொன்றதாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்ள தோட்டத்து சாலை வீதியை சேர்ந்தவர்கள் நாகராஜ் -தமிழ் இசக்கி தம்பதி. கணவர் விசைத்தறி தொழிலாளியாக பணிபுரிகிறார், அவரது மனைவி பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஷிவன்யா ஸ்ரீ என்ற இரண்டரை வயது மகள் இருந்தார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையை சந்தேகம் புரட்டி போட்டது. கணவர் மீதுள்ள சந்தேகத்தால் குழந்தையை கொன்றதாக தாய் கைதாகியுள்ளார். அவரளித்துள்ள வாக்குமூலத்தில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நாகராஜ் வேறு ஒரு பெண்ணுடன் பேசி வந்த நிலையில், இரவில் அதிகமாக வாட்ஸ் - அப்பில் மெசெஜ் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவர் மீது சந்தேகமடைந்த தமிழ், அவரிடம் சண்டை போடுவதை வாடிக்கையாக்கினார். இருவருக்குமான சண்டை அவர்களுக்கு இடையேயான விரிசலை அதிகரித்தது. மனைவியுடன் பேசுவதை நிறுத்திய நாகராஜ், தொலைபேசி அழைப்புகளை தவிர்த்தார். இதனால் விரக்தியடைந்த தமிழ் தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்

தான் உயிரிழந்தால் குழந்தையின் கதி என்னாகும் என யோசித்த தமிழ் வேறு வழியின்றி, குழந்தையை கொலை செய்வது எப்படி என யூடியூப் மூலம் வீடியோவை தேடி பார்த்துள்ளார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தை பயன்படுத்தி, யூடியூப்பில் பார்த்தபடி குழந்தையை தண்ணீர் டிரமுக்குள் முக்கி, மூச்சடைக்கச் செய்து கொலை செய்தார். உயிரிழந்த குழந்தையை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து, கட்டிலில் கிடத்திய தமிழ், தான் தற்கொலை செய்வதற்காக மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொள்ள முயற்சித்துள்ளார்.

அந்த நேரத்தில் கணவரின் இருசக்கர வாகன சத்தம் கேட்டதால், மயக்கமடைந்தது போல் கீழே படுத்துக்கொண்டு, அடையாளம் தெரியாத இருவர் தன்னை தாக்கிவிட்டு, குழந்தையை நீரில் மூழ்கி கொன்றதாக நாடகமாடியுள்ளார். கணவர் நாகராஜ் கொடுத்த தகவலில் அடிப்படையில் சந்தேகத்திடமான கொலை என வழக்குப்பதிவு செய்து மங்கலம் போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய தமிழ், குழந்தையை யூடியூப் வீடியோ பார்த்து கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தமிழ்இசக்கியை போலீசார் ஆஜர்படுத்தினர். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

click me!