புதுக்கோட்டை அருகே முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரைச் சேர்ந்தவர் மூர்த்தி. அதிமுக பிரமுகரான இவர் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு கடன் தகராறு ஒன்றில் தந்தை-மகன் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் மூர்த்தி குற்றம் சாற்றப்பட்டிருந்தார். அதுதொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு மூர்த்தி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தற்போது பிணையில் வெளி வந்திருக்கிறார். இந்தநிலையில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு கடையில் இன்று காலையில் மூர்த்தி டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் சிலர் வந்தனர். மூர்த்தியிடம் தகராறில் ஈடுபட்ட அவர்கள் திடீரென கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்த அவர் சரிந்து விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். பின் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் நடத்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தந்தை-மகன் கொலைக்கு பழிவாங்க மூர்த்தி கொலைசெய்யப்ட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் புதுக்கோட்டை காவலர்கள், தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read: நிறைமாத கர்ப்பிணி மீது பயங்கரமாக மோதிய கார்..! தூக்கி வீசப்பட்டு மகனுடன் பலி..!