
விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த 8 கொடியவர்களையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இளம்பெண்ணை காதலிப்பது போல் நடித்து அவருடன் நெருக்கமாக இருந்து ஆபாச வீடியோ பகிர்ந்த காதலன் உட்பட, அதை வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த 8 பேர் கொண்ட கும்பலை போலாசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ராமதாஸ் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
விருதுநகர் மேல தெருவை சேர்ந்தவர் பால் வியாபாரி ஹரிகரன்(27) அதே பகுதியில் உள்ள 22 வயதான இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி நாடகமாடி உள்ளார். அவர் விரித்த வலையில் அந்தப் பெண் சிக்கினார், அதில் அந்தப் பெண் ஹரிகரன் நம்பி நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதைப் பயன்படுத்தி ஹரிகரன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதை தன் நண்பர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவை வைத்து அந்த இளம்பெண்ணை மிரட்டிய அந்த கும்பல், அந்த பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்தி வந்தனர். தங்கள் ஆசைக்கு இணங்காவிட்டால் இதை சமூகவலைதளத்தில் பரப்பிவிடுவோம் என அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது.
இந்நிலையில் அந்த பெண்ணின் வீட்டுக்கே சென்று அந்தப் பெண்ணை 8 பேர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதில் அந்த பெண் மிக கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் இந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தில் பால் வியாபாரி ஹரிகரன், ரோசல்பட்டியை சேர்ந்த மாடசாமி (37) விருதுநகர் மொன்னி தெருவை சேர்ந்த ஜுனைத் அகமது (27) உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைதானவர்கள் 5 பேர் 17 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இந்த வன்கொடுமையை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டித்து வருகின்றனர். இதுகுறித்து டுவிட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மிருகம் போல் நடந்து கொண்ட அந்த 8 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் இட்ட பதிவு பின்வருமாறு:- விருதுநகரில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண்ணை மிரட்டி மாணவர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேர் தொடர்ந்து 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. இளம்பெண்ணை சீரழித்த கொடியவர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல. மனிதநேயமின்றி, மிருகங்களைப் போன்று செயல்பட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்!
விருதுநகர் பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஒருவர், அதை படம் பிடித்து மிரட்டி தான் தொடர் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் நீதி கேட்டு சென்ற போது அவரும் இதே குற்றத்தை செய்துள்ளார். இவர்களை மன்னிக்கக் கூடாது! பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, தங்களைப் பற்றிய விவரங்கள் வெளியில் வராமல், காவல்துறையை அணுகி நீதி பெறுவது குறித்த விழிப்புணர்வு இல்லாதது தான் அவர்கள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட காரணம். இது குறித்த பொது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.