பரபரப்பை ஏற்படுத்திய திருச்சி நகைக்கொள்ளை சம்பவம்..! 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டதாக காவல்துறை தகவல்..!

By Manikandan S R SFirst Published Oct 16, 2019, 5:03 PM IST
Highlights

திருச்சி நகைக்கொள்ளை சம்பவத்தில் 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டிருப்பதாக காவல் ஆணையர் அமல்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் லலிதா ஜுவல்லரி கடையில் கடந்த 2ம் தேதி அதிகாலை கொள்ளையர்கள் புகுந்தனர். அங்கிருந்து 28 கிலோ எடை கொண்ட சுமார் 12 கோடி மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பிச்சென்றனர். தமிழகம் முழுவதும் இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்றனர். இதனிடையே திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் இதுவரை 25 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டிருப்பதாக திருச்சி காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, "திருச்சியில் நடைபெற்ற நகை கொள்ளையில் 28 கிலோ நகைகள் மொத்தம் திருடு போயிருந்தது. அவற்றில் இதுவரை 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. 

இந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான முருகனை விசாரிக்க அனுமதி கோரி பெங்களூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நகைகடை கொள்ளையில் நேரடியாக மூன்று பேரும் மறைமுகமாக சிலரும் ஈடுபட்டுள்ளனர்.  நகை திருட்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான முருகனிடம் விசாரித்த பிறகே நகைகள் முழுமையாக மீட்கப்படும். வழக்கு விசாரணைக்கு பெங்களூரு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

click me!