அரசு அதிகாரி வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் அபேஸ்..! மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு..!

By Manikandan S R SFirst Published Oct 2, 2019, 1:02 PM IST
Highlights

சேலம் அருகே ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

சேலம் அருகே இருக்கும் அல்லிக்குட்டை பாரதியார் நகரைச் சேர்ந்தவர் முத்துமாணிக்கம். வயது 61. இவர் சேலம் மாநகராட்சியில் சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது ஓய்வு பெற்றுவிட்ட இவர் குடும்பத்தினரோடு தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் தனது 61வது பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாட முத்து மாணிக்கம் முடிவு செய்திருக்கிறார். இதற்காக திருக்கடையூரில் இருக்கும் அபிராமி அம்மன் கோவிலுக்கு  உறவினர்களுடன் ஒரு தனி பேருந்தில் நேற்று முன்தினம் அதிகாலை சென்றிருக்கிறார்.

இதை மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டு உள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததை சாதகமாகப் பயன்படுத்திய அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கே பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல் பின்னர் தப்பி ஓடி விட்டனர்.

திருக்கடையூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிய முத்துமாணிக்கம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு செய்வதறியாது திகைத்தார். உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வீராணம் காவல்துறையினர் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து சோதனை நடத்தினர். அந்தப் பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து கொள்ளையர்களை பற்றிய தகவல் கிடைக்குமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

click me!