இந்தியாவில் 4 ஆவது கொரோனா அலை வருவதாக கூறுவது தவறானது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 4 ஆவது கொரோனா அலை வருவதாக கூறுவது தவறானது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 7 ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 3,714 ஆக இருந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதி அது 5,233 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று சற்றும் எதிராபாத விதமாக பாதிப்பு 7 ஆயிரத்தைக் கடந்து மொத்தமாக 7,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படிருந்தது. அதை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 5 ஆயிரத்து 106 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா அதிகம் உள்ள மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்தறை அறிவுறுத்தி உள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தற்போது சற்றே அதிகரித்து வரும் நிலையில், இது பெருந்தொற்றின் 4 ஆவது அலையா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பதை வைத்து 4 ஆவது கொரோனா அலை வருவதாக கூறுவது தவறானது என்று ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்த ஐசிஎம்ஆர் கூடுதல் தலைமை இயக்குனர் சமிரன் பாண்டா அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் 4 ஆவது கொரோனா அலை வருவது என்று கூறுவது தவறானது. மாவட்ட அளவில் தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும். ஒரு சில மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பத்தை வைத்து கொண்டு நாடு முழுவதும் தொற்று அதிகரிப்பதாக கூற முடியாது. அனைத்து வகை உருமாறிய தொற்றுகளும் அச்சத்தை ஏற்படுத்துவது அல்ல. ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கருதக்கூடாது. கொரோனாவின் ஒவ்வொரு வகையும் கவலைக்குரிய மாறுபாடுகள் அல்ல என்று தெரிவித்துள்ளார்.