கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை... எவ்வளவு ரூபாய் தெரியுமா..?

By Asianet TamilFirst Published Sep 22, 2021, 9:56 PM IST
Highlights

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
 

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இப்போது வரை 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இச்சட்டத்தின்படி பேரிடரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உள்ளது. இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், ‘இச்சட்டத்தின்படி குறைந்தபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜூன் 30-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வழிகாட்டுதல்களை 6 வாரங்களுக்குள் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் வகுக்க வேண்டும் என்றும் அதை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தொகை எவ்வளவு வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில், “ கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கலாம்” என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அதுமட்டுல்லாமல், கொரோனா பேரிடரை கையாளும் பணியிலும், நிவாரண பணிகளிலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு தொகையை அளிக்கலாம் எனவும் அந்தப் பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த இழப்பீடு ஏற்கனவே கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மட்டுமின்றி, இனி வரும் காலங்களில் உயிரிழப்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!