
சட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான CLAT 2026 (Common Law Admission Test) முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, இளங்கலை மற்றும் முதுகலை சட்டப் படிப்புகளில் சேருவதற்கான போட்டிகள் தொடங்கிவிட்டன. நாடு முழுவதும் உள்ள சிறந்த சட்டக் கல்லூரிகள் எவை? எங்கு படித்தால் நல்ல வேலை கிடைக்கும்? என்ற குழப்பம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுவது வழக்கம். இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் வகையில், என்.ஐ.ஆர்.எஃப் (NIRF Ranking 2025) தரவரிசைப்படி, இந்தியாவின் தலைசிறந்த 10 சட்டப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
இந்தியாவின் நம்பர் 1 சட்டக் கல்லூரியாகப் போற்றப்படுவது பெங்களூருவில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் (NLSIU). இங்குள்ள கல்விச் சூழல் மிகவும் தொழில்முறை வாய்ந்தது மற்றும் நாட்டின் சிறந்த சட்ட வல்லுநர்கள் இங்கு பாடம் நடத்துகிறார்கள். இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இங்கு சேருவதற்கு CLAT தேர்வில் அதிக மதிப்பெண்கள் (Cutoff) பெறுவது அவசியம்.
இரண்டாம் இடத்தில் இருப்பது டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம். நாட்டின் தலைநகரில் அமைந்திருப்பதால், நீதிமன்றங்கள் மற்றும் சட்ட நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு எளிதாகக் கிடைக்கிறது. இங்கு செய்முறைப் பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இங்கு CLAT தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறுவதில்லை; மாறாக, NLAT எனும் தனி நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ஹைதராபாத் நல்சார் பல்கலைக்கழகம் (NALSAR) கல்வித் தரம், ஒழுக்கம் மற்றும் ஆராய்ச்சிக்கு மிகவும் புகழ்பெற்றது. இங்கு படிக்கும்போதே மாணவர்கள் மாதிரி நீதிமன்றம் (Moot Court) மற்றும் வழக்கு ஆய்வுகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது அவர்களின் நடைமுறை அறிவை வளர்க்கிறது. இங்கு CLAT தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அகில இந்திய அளவில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
கொல்கத்தாவில் உள்ள NUJS பல்கலைக்கழகம் கார்ப்பரேட் சட்டம் மற்றும் சர்வதேச சட்டப் படிப்புகளுக்குப் பெயர் பெற்றது. இதன் முன்னாள் மாணவர்கள் (Alumni Network) பல முக்கிய பதவிகளில் இருப்பதால், இங்கு படிக்கும் மாணவர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன. இங்கும் CLAT தேர்வு மூலமே சேர்க்கை நடைபெறுகிறது.
சமீபகாலமாக வேகமாக வளர்ந்து வரும் பல்கலைக்கழகங்களில் ஒன்று குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகம். நவீன உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடனான ஒப்பந்தங்கள் இதன் பலமாகும். சில சிறப்புப் படிப்புகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டாலும், பொதுவான சேர்க்கை CLAT தேர்வு மூலமே நடைபெறுகிறது.
ஐஐடி கரக்பூரில் உள்ள இந்தச் சட்டக் கல்லூரி, தொழில்நுட்பம் மற்றும் சட்டம் சார்ந்த படிப்புகளுக்கு, குறிப்பாக அறிவுசார் சொத்துரிமை (IP Law) சட்டத்திற்குச் சிறந்தது. பொறியியல் முடித்த மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இங்கு CLAT, JAM அல்லது நிறுவனத்தின் சொந்தத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படுகிறது.
தனியார் சட்டக் கல்லூரிகளில் மிகவும் பிரபலமானது புனே சிம்பயோசிஸ் (Symbiosis). இங்கு படிப்புடன் சேர்த்துத் தொழில் அனுபவம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு (Placements) அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பல பெரிய சட்ட நிறுவனங்கள் இங்கு வந்து மாணவர்களைத் தேர்வு செய்கின்றன. இங்கு SLAT நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.
குறைந்த கட்டணத்தில் தரமான சட்டக் கல்விக்கு ஜாமியா மில்லியா இஸ்லாமியா சிறந்த தேர்வாகும். டெல்லியில் இருப்பதால் நீதிமன்றப் பயிற்சி வாய்ப்புகள் அதிகம். இங்கு பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் தனி நுழைவுத் தேர்வு மற்றும் தகுதி (Merit) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற சட்டப் பீடத்தைக் கொண்டது AMU. இங்கு படித்த பலர் நீதித்துறையில் பெரிய ஆளுமைகளாக வலம் வருகின்றனர். இங்கு தனியாக நடத்தப்படும் சட்ட நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறுகிறது. மற்ற இடங்களை விட இங்கு கல்விக் கட்டணம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ந்து வரும் தனியார் பல்கலைக்கழகங்களில் புவனேஸ்வர் SOA முக்கியமானது. நவீன வசதிகள் மற்றும் தொழில் சார்ந்த பயிற்சிகளுக்கு இங்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு அல்லது மதிப்பெண் அடிப்படையில் இங்குச் சேர்க்கை வழங்கப்படுகிறது.
சட்டத்துறையில் சாதிக்கத் துடிக்கும் மாணவர்கள், தங்களின் எதிர்காலத் லட்சியத்திற்கு ஏற்ப (Corporate Law, Judiciary, Research) சரியான கல்லூரியைத் தேர்வு செய்வது அவசியம்.