கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 57,500 ரூபாய் ஊதியம்.! முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை

Published : Sep 26, 2025, 10:01 AM IST
OPS demands

சுருக்கம்

 தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்படி மாத ஊதியத்தை ரூ.25,000-லிருந்து ரூ.57,500 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tamil nadu guest lecturers salary hike : கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிக அடிப்படையிலேயே பணியில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டு்ம் தற்போது வழங்கப்பட்டு வரும் மாதம் 25ஆயிரம் ஊதியத்தை 57.500ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பதின்மூன்றாயிரம் என்று இருக்கின்ற நிலையில், வெறும் ஐயாயிரம் ஆசிரியர்கள் மட்டுமே நிரந்தரமாக பணியாற்றி வருகிறார்கள். கிட்டத்தட்ட ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்காலிகமாக கடந்த இருபது ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் என்ற பெயரில் பணிபுரிந்து வருகிறார்கள்.

கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம்

இவ்வாறு கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரியும் அனைவருமே அந்தப் பதவிக்குரிய முழுத் தகுதியையும் பெற்றவர்கள். 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்று தமிழ்நாடு இன்று விழா நடத்துகிறது என்றால், அதில் முக்கியப் பங்கு கவுரவ விரிவுரையாளர்களுக்கு உண்டு என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

இப்படிப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆண்டிற்கு 11 மாதங்களுக்கு மட்டும் மாதம் 25,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது என்பது மிகவும் வேதனை அளிக்கும் செயல். இன்றைக்கு அமைப்புசாரா பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கு கூட ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகின்ற நிலையில், அதைவிட குறைவாக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்குவது என்பது சட்டத்திற்கு விரோதமான முறையற்ற செயல்.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 57,500 ஊதியம்

உயர் கல்வியை முறைப்படுத்தும் அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு 57,500 ரூபாய் மாதச் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்று ஏற்கெனவே ஆணை பிறப்பித்திருந்தது. இதனை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆணையை பின்பற்றுகின்றன. இது மட்டுமல்லாமல் 1,146 கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப்படுத்தும் பள்ளிக் கல்வித் துறை அரசாணை எண் 56-ஐயும் தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. இதுகுறித்து நான் ஏற்கெனவே பல அறிக்கைகள் விடுத்திருந்தேன். இருப்பினும், தி.மு.க. அரசு இதனைச் செயல்படுத்த தொடர்ந்து மறுத்து வருவது வேதனை அளிக்கிறது.

கவுரவ விரிவுரையாளர்களின் நீண்டகால அனுபவத்தினைக் கருத்தில் கொண்டு, அவர்களுடைய உழைப்புக்கு மதிப்பளித்து, உயர் கல்வியின் ஆணிவேராகத் திகழும் அவர்களின் திறனுக்கு கவுரவம் அளிக்கும் வகையில், முதற்கட்டமாக பல்கலைக்கழக மானியக் குழு பிறப்பித்த உத்தரவின்படி 57,500 ரூபாய் ஊதியம் வழங்கவும், பின்னர் அவர்களை நிரந்தரமாக பணியமர்த்தவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துவதாக ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Job Alert: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! அரசு வேலை காத்திருக்கு! டோன்ட் மிஸ்
Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!