CUET தேர்வில் இணையும் நீட் JEE தேர்வுகள்; ஒரே நாடு, ஒரே தேர்வு - பதறும் மாணவர்கள்!!

By Raghupati RFirst Published Aug 12, 2022, 7:15 PM IST
Highlights

தற்போது தனித்தனியாக நடைபெற்று வரும் நீட், JEE தேர்வுகளை CUET தேர்வுடன் யுஜிசி திட்டமிட்டு இருப்பதாக வெளியாகும் செய்திகளால் மாணவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இது கடந்த சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்தன. திமுக தனது தேர்தல் அறிக்கையில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்தது. 

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் நீட் விலக்கு மசோதா 2021 செப்டம்பர் மாதம் 13ம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இந்த மசோதாவை அவர் 142 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு ஆளுநர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இருப்பினும் தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படவில்லை. மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு தயாராகும் தமிழக மாணவர்களுக்கு முட்டுக்கட்டையாக நீட் தேர்வு இருக்கிறது என்பதே தமிழக அரசு மற்றும் தமிழக மக்களின் நிலைப்பாடாக உள்ளது. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முன்மொழிந்து, மத்திய அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிய நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை தமிழக அரசு எதிர்பார்க்கிறது. 

தமிழக அரசின் கூற்றுப்படி, ஒரே நாளில் நாடெங்கும் நடத்தப்படும் நீட் தேர்வு, குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கிராமப்புற பின்னணியில் உள்ள மாணவர்கள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை நீட் தேர்வு சிதைக்கிறது. வசதி உடையவர்களால் மட்டுமே நீட் தேர்வுக்கு சிறந்த பயிற்சியை பெற்று மருத்துவர் ஆக முடியும். நீட் தேர்வுக்கு அனைத்து மாணவர்களுக்கும் சம பயிற்சி வழங்கப்படுவதில்லை. 

நீட் தேர்வு ஏழை, கிராமப்புற மாணவர்ளுக்கு எதிராகவும், பயிற்சி வகுப்பு செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது. இத்தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முறை சமூக நீதிக்கு எதிரானது என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர். அனைத்து இளநிலை படிப்புகளுக்கும் ஒருங்கிணைந்த பொது தகுதித் தேர்வு நடத்த பல்கலைக்கழக மானியக் குழு (UGC) திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி, நீட், JEE தேர்வுகளை CUET தேர்வுடன் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு CUET- UG எனும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  அதேபோன்று, நாட்டில் உள்ள 31 தேசிய தொழில்நுட்பக் கழகம் ,26 தொழில்நுட்ப நிறுவனங்களின் (IIITs), மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை ஜேஇஇ முதன்மை தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.

மேலும் செய்திகளுக்கு..TN TET Exam 2022 : ஆசிரியர் தகுதி தேர்வு தேதி ‘திடீர்’ மாற்றம் - தேர்வு எப்போது தெரியுமா?

இந்த மூன்று நுழைவுத் தேர்வுகளும் தேசியளவில் பிரபலமானது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த மூன்று தேர்வுகளுக்கு மட்டும், ஆண்டுக்கு  சராசரியாக 40 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அனைத்து இளநிலை படிப்புகளுக்கும் ஒருங்கிணைந்த பொது தகுதித் தேர்வு நடத்த பல்கலைக்கழக மானியக் குழு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பேசிய யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறும்போது, ’’ஒரே மாதிரியான அறிவை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்கள் ஏன் ஒரே நேரத்தில் பல்வேறு வகையான நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும்? இந்தத் தேர்வுகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒரே நுழைவுத் தேர்வின் மூலம், பல விதமான வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிடுகிறோம்.  பொதுவாக சில மாணவர்கள் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்புகளைப் படிக்க முயற்சிக்கின்றனர். 

அவை கிடைக்காதபோது CUET தேர்வு மூலம் பொது அறிவியல் படிப்புகளைப் படிக்கின்றனர். இதனால் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் CUET தேர்வுடன் ஒன்றிணைத்து விடலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என்று கூறியுள்ளார். இதுபற்றி நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, 'நுழைவுத்தேர்வுகளை ஒன்றாக ஒன்றிணைத்து நடத்தும் போது, பல்வேறு முறைகேடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

மூன்று முக்கிய தேர்வுகளை இணைத்து வெளிப்படை தன்மையுடன் நடக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருட CUET தேர்வுகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், 3 முக்கிய தேர்வுகளை ஒன்றாக இணைத்து நடக்கும் போது ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கும்’ என்று எச்சரித்துள்ளார். ஏற்கனவே நீட் தேர்வால் பதற்றத்தில் இருக்கும் மாணவர்கள் மேலும் பதற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

click me!