சாயம் வெளுத்தது.. என்.டி.ஏ செய்த மெகா தவறு? நாடாளுமன்ற குழு வெளியிட்ட 'பகீர்' ரிப்போர்ட்!

Published : Dec 08, 2025, 10:52 PM IST
NTA

சுருக்கம்

NTA தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் மற்றும் 2024 தேர்வு குளறுபடிகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட அறிக்கை.

இந்தியாவில் மத்திய அரசின் பல்வேறு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு 'தேசிய தேர்வு முகமைக்கு' (NTA) வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் ஏற்பட்ட தொடர் குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்கள் மாணவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு, என்.டி.ஏ-வின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

2024-ல் மட்டும் 5 முக்கியத் தேர்வுகளில் சிக்கல்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையின்படி, 2024-ம் ஆண்டில் மட்டும் என்.டி.ஏ நடத்திய 14 போட்டித் தேர்வுகளில் குறைந்தது 5 தேர்வுகள் பெரிய அளவிலான சிக்கல்களைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, யுஜிசி நெட் (UGC-NET), சிஎஸ்ஐஆர் நெட் (CSIR-NET) மற்றும் நீட் முதுநிலை (NEET-PG) தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இளநிலை நீட் (NEET-UG) தேர்வில் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. கியூட் (CUET) தேர்வு முடிவுகள் வெளியாவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. இது மாணவர்களின் நம்பிக்கையை வெகுவாக பாதித்துள்ளது.

கணினி வழித் தேர்வா? வழக்கமான தாள் முறையா?

தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, கணினி வழித் தேர்வுகளைக் (CBT) காட்டிலும், பாரம்பரியமான 'பேனா மற்றும் தாள்' (Pen and Paper) முறை சிறந்தது என நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. கணினி வழித் தேர்வுகளில் ஹேக்கிங் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், அவற்றை எளிதில் கண்டறிய முடிவதில்லை என்றும் குழு கவலை தெரிவித்துள்ளது. அதே சமயம், யுபிஎஸ்சி (UPSC) மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வுகள் பல ஆண்டுகளாக வினாத்தாள் கசிவு இன்றி காகித முறையில் வெற்றிகரமாக நடத்தப்படுவதை என்.டி.ஏ பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உபரி நிதியும் உள்கட்டமைப்பு மேம்பாடும்

கடந்த ஆறு ஆண்டுகளில் என்.டி.ஏ சுமார் ரூ.3,512 கோடியை தேர்வுக் கட்டணமாக வசூலித்துள்ளது. இதில் செலவுகள் போக ரூ.448 கோடி உபரி நிதியாக கையிருப்பில் உள்ளது. இந்த நிதியை வைத்துக்கொண்டு தனியார் நிறுவனங்களை நம்பியிருப்பதை விட, தேர்வுகளை நடத்துவதற்கான சொந்தக் கட்டமைப்பை என்.டி.ஏ உருவாக்க வேண்டும் என நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது. இனி கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டால், அவை முழுக்க முழுக்க அரசு அல்லது அரசு கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும், தனியார் மையங்களில் நடத்தக்கூடாது என்றும் கறாராகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு 'ரெட் கார்டு'

தேர்வுப் பணிகளில் ஈடுபடும் சில தனியார் நிறுவனங்கள், முறைகேடுகள் காரணமாக சில மாநில அரசுகளால் தடை (Blacklist) செய்யப்பட்டிருந்தாலும், வேறு மாநிலங்களில் ஒப்பந்தங்களைப் பெறுகின்றன. இதனைத் தடுக்க, நாடு தழுவிய அளவில் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலைத் தயாரித்து, அவற்றை இனி எந்தத் தேர்வுப் பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. என்.டி.ஏ தனது நம்பகத்தன்மையை மீட்டெடுக்க உடனடியாகச் செயல்பட வேண்டும் என்பதே இந்த அறிக்கையின் சாராம்சமாகும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிர்ச்சி தகவல்! கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10,000 காலிப்பணியிடங்கள்.. மாணவர் சேர்க்கையும் கடும் சரிவு!
ரயில்வே வேலைக்கு அப்ளை பண்ணீங்களா? நாளையே வெளியாகும் முக்கிய அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!