இந்தியாவில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியால் அத்துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன
இந்தியாவில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறை கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளது என்பதை அத்துறையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. ஜூன் 2022 முதல் 2023 வரை அந்த துறையில் வேலை வாய்ப்புகள் 66 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-2020இல் 60 சதவீதம் சரிவு, அடுத்த ஆண்டு 7 சதவீதம் சரிவு உள்ளிட்டவற்றில் இருந்து அத்துறை மீண்டுள்ளது, குறிப்பிடத்தக்க திருப்பமாகும்.
இன்டீடின் தரவுகளின்படி, டெல்லி (33%), மும்பை (6%), மற்றும் பெங்களூரு (5%) ஆகியவை பயணத் துறையில் அதிகம் தேடப்படும் வேலைகளுக்கான முதல் மூன்று நகரங்கள் ஆகும். மொஹாலி மற்றும் கோயம்புத்தூர் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களிலும் தலா 4% வேலைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
undefined
பயண முகவர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு கடந்த ஆண்டில் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த தரவுகள் கூறுகின்றன. விருந்தோம்பல் துறையில் வேலை வாய்ப்புகள் டெல்லியில் 20 சதவீதம், மும்பையில் 7 சதவீதம் மற்றும் பெங்களூருவில் 6 சதவீதம் என கணிசமாக அதிகரித்துள்ளன. அதேபோல், இந்த நகரங்களில் வேலை தேடுபவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதன்படி, டெல்லி (19%), மும்பை (9%), மற்றும் பெங்களூர் (5.29%) என இந்த துறையில் வாய்ப்புகளைத் தேடும் வேலை தேடுபவர்களின் சதவீதமும் அதிகரித்துள்ளது.
இன்டீட் இந்தியாவின் விற்பனைத் தலைவர் சஷி குமார், இந்த தரவுகள் குறித்து கூறுகையில், “இந்தியாவில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறையானது தொற்றுநோயிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் மீண்டும் வந்துள்ளது, விருந்தோம்பல் பதவிகளுக்கான வேலை வாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்பட்டுள்ளது. சுற்றுலா அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் 21.1 மில்லியன் இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டு 8.6 மில்லியன் பேர் சென்ற நிலையில், குறிப்பிடத்தக்க வகையில் அது அதிகரித்துள்ளது. சவாலான சரிவின் காலத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த நேர்மறையான திருப்பம் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்திற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது. பயணிகள் பட்ஜெட் விலையில் சுற்றுலா அனுபவங்களைத் தீவிரமாகத் தேடுகிறார்கள். இதன் மூலம் பயண ஆலோசகர்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது. அவர்களால் பாதுகாப்பான, மற்றும் செலவில் சுற்றுலா அனுபவத்தை உருவாக்கித் தர முடியும்.” என்கிறார்.
குடியேற்றப் பணியகத்தின் தரவுகளின்படி, 2023 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்திலான 79 சதவீதத்தை எட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக, பார்க்கையில் இந்தியாவில் விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் வேலை வாய்ப்புகள் குறித்த நேர்மறையான கண்ணோட்டம் உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பயண விருப்பங்களை வழங்கும் தங்குமிடம், உள்நாட்டு சுற்றுலா, வேலைச் சுற்றுலா, தனியாக செல்லும் சுற்றுலா பயணம் என மாறிவரும் வாடிக்கையாளர் விருப்பங்களை ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டதன் மூலம் இந்திய சுற்றுலாத்துறை மீண்டு வந்துள்ளதாக கூறுகிறார்கள். இந்த மாற்றத்தில் தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கிறது. விருந்தோம்பல் பயணத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் தடையற்ற டிஜிட்டல் அனுபவங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
பயணம் மற்றும் சுற்றுலாத்துறையின் இந்த மறுமலர்ச்சியானது தொழில்துறைக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை குறிப்பதோடு, வேலை தேடுவோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் விருந்தோம்பல் துறையில் வேலைவாய்ப்பை பெறுவதற்கான ஆர்வம் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த துறையில் உள்ள தொழில் வல்லுநர்களுக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள் மற்றும் சலுகைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம். இழப்பீடு தவிர செயல்திறன் அடிப்படையிலான பயணத் தள்ளுபடிகள் மற்றும் கமிஷன் ஆகியவற்றை பயண முகவர் தொழில் நிறுவனங்கள் வழங்குகின்றன.
புதுமையான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட இந்தியாவின் பயணம் மற்றும் சுற்றுலாத் துறை ஒரு பிரகாசமான புதிய அத்தியாயத்திற்கு தயாராக உள்ளதாக அத்துறையில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.