தமிழகத்தில் 10 புதிய அரசு கல்லூரிகளும் , 15,000 கூடுதல் இடங்கள் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் 10 புதிய அரசு கல்லூரிகளும் , 15,000 கூடுதல் இடங்கள் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
2025-26ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிகிழமை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏராளமான புதிய அறிவிப்புகள் இடம்பெற்றன. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில் ," "புதுமைப் பெண்", "தமிழ்ப்புதல்வன்" போன்ற முன்னோடித் திட்டங்களால் தமிழ்நாட்டில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தத் தேவைகளை நிறைவேற்றும் விதமாக, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆவடி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். தமிழ்நாடு அரசு, மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் விதமாக, 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அறிவித்துள்ளது. இந்த கல்லூரிகள் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும்." என்றார்
கூடுதல் இடங்கள்:
தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி முறையில் மாணவர்கள் அதிகம் விரும்பித் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவுகளில் கூடுதலாக 15,000 இடங்கள் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். இம்முயற்சிக்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் மனிதவளத்திற்காக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு என்ன பயன்கள்?
தங்கள் விருப்பப்படி கலை மற்றும் அறிவியல் படிப்புகளை படிக்கலாம். குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி பெறலாம். தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம். நல்ல வேலை வாய்ப்புகளை பெறலாம். சமூகத்தில் உயர்ந்த நிலையை அடையலாம். விரும்பிய பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு, மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள வேண்டும்.