
பள்ளிப் படிப்பை முடித்து, இன்னும் கல்லூரியில் சேர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு அருமையான வாய்ப்பை வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்களின் அறிவிப்பின்படி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
கடந்த ஆண்டுகளின் சேர்க்கை நிலவரம்
2025-26 கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை மே மாத இறுதியில் தொடங்கியது. 176 அரசு கல்லூரிகளில் உள்ள பல்வேறு இளங்கலை படிப்புகளில் சேர 2.25 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஜூன் மாதத்தில் கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெற்று, ஜூன் 30-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதேபோல, முதுகலை படிப்புகளுக்கும் ஜூலை வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் கலந்தாய்வு மற்றும் வகுப்புகள் தொடங்கின.
கல்வியியல் கல்லூரி சேர்க்கை நிலவரம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகளுக்கான சேர்க்கையும் ஜூன் மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற்றது. பி.எட் படிப்புக்கான வகுப்புகள் ஆகஸ்ட் இறுதியில் தொடங்க, எம்.எட் படிப்புக்கான வகுப்புகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
புதிய திட்டங்கள் மற்றும் கூடுதல் இடங்கள்
மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதை ஊக்குவிக்க, புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, உயர்கல்வியில் அதிக மாணவர்கள் சேருவதை உறுதி செய்ய, அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் சுமார் 15,000 இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 15 புதிய கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு கல்லூரியில் சேர முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை உயர்கல்வித்துறை வழங்கியுள்ளது. துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், பொருளாதாரக் காரணங்களால் படிப்பைத் தொடர இயலாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணம் மிகக் குறைவு என்பதுடன், உதவித்தொகையுடன் பட்டப்படிப்பை முடிக்கவும் வாய்ப்பு உள்ளது. எந்தெந்த கல்லூரிகளில் எந்தெந்த பாடப்பிரிவுகளில் இன்னும் இடங்கள் உள்ளன என்ற விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.