
அரசு வேலை என்றால் வேலைப்பளு குறைவு, நீண்ட காலப் பாதுகாப்பு, ஓய்வுக்குப் பின் பென்ஷன் போன்ற காரணங்களால் பலரும் அதை விரும்புவார்கள். ஆனால், அரசு வேலைகளில் சம்பளம் குறைவாக இருக்கும் என்ற எண்ணம் பலரிடம் உண்டு. தனியார் துறைக்கு நிகராக, லட்சங்களில் சம்பளம் தரும் பல அரசுப் பணிகள் தற்போது உள்ளன. அதிக சம்பளம் மற்றும் சௌகரியமான வாழ்க்கை தரும் இந்தியாவின் டாப் 5 அரசுப் பணிகளைப் பற்றிப் பார்க்கலாம்.
1. ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள்
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க அரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பதவிகள் முதலிடத்தில் உள்ளன. இவர்கள் அரசின் கொள்கைகளை வகுப்பதிலும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். மிகவும் போட்டி நிறைந்த யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இவர்களுக்கு, கவர்ச்சிகரமான சம்பளத்துடன், அரசு வீடு, வாகனம், பாதுகாப்பு மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆரம்பச் சம்பளம் ரூ.56,100 ஆக இருந்தாலும், அனுபவத்தின் அடிப்படையில் ரூ.2,50,000 வரை உயரக்கூடும்.
2. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிரேடு பி அதிகாரிகள்
இந்தியப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் ரிசர்வ் வங்கியின் பங்கு மிக முக்கியமானது. ஆர்.பி.ஐ கிரேடு பி அதிகாரி பணி, மிக அதிக சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. இவர்களுக்கான ஆரம்பச் சம்பளம் சுமார் ரூ.55,200 ஆக உள்ளது, அது அனுபவத்தின் அடிப்படையில் ரூ.1,08,404 வரை அதிகரிக்கும். மேலும், வீட்டு வாடகை, மருத்துவச் செலவுகள், பயணப்படி, வாகனப் பராமரிப்பு எனப் பல்வேறு சலுகைகளையும் பெறலாம்.
3. தேசிய பாதுகாப்புப் படைகள் (NDA)
இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு தேசிய பாதுகாப்பு அகாடமி ஒரு சிறந்த வாய்ப்பு. இங்குள்ள அதிகாரிகள், கவுரவமான வாழ்க்கையுடன் போட்டி நிறைந்த சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெறுகிறார்கள். 7-வது ஊதியக் குழுவின்படி, லெப்டினன்ட் பதவியில் தொடங்கும் ஒருவரின் சம்பளம் ரூ.56,100 ஆக இருக்கும். படிப்படியாக உயர்ந்து, அதிகபட்சமாக ரூ.1,77,500 வரை சம்பளம் பெற முடியும்.
4. இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள்
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத் துறையில் இஸ்ரோ (ISRO) மற்றும் டி.ஆர்.டி.ஓ (DRDO) நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் இன்ஜினீயர்கள் மிக அதிக சம்பளம் பெறுகின்றனர். இவர்களுக்கான சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை இருக்கும். அடிப்படைச் சம்பளத்துடன் வீட்டு வாடகை, போக்குவரத்து, மருத்துவச் சலுகைகள் எனப் பல வசதிகள் வழங்கப்படும்.
5. இந்திய வனத்துறை (IFS) அதிகாரிகள்
இயற்கை மற்றும் வனவிலங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் இந்திய வனத்துறை அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் மற்றும் தனித்துவமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. உதவி ஆய்வாளர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் போன்ற பதவிகளில் சேரும் அதிகாரிகளுக்கு ஆரம்பச் சம்பளம் ரூ.56,100. இது படிப்படியாக உயர்ந்து, மூத்த நிலைகளில் ரூ.2,25,000 வரை கிடைக்கக்கூடும். சம்பளத்துடன், அரசு குடியிருப்பு, போக்குவரத்து, ஓய்வூதியப் பலன்கள் போன்றவையும் உண்டு.