
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வியை எளிதாகத் தொடர வேண்டும் என்பதற்காக, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) ஒவ்வொரு வருடமும் கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். செப்டம்பர் 22-ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியா முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐடிஐ நிலையங்களில் பயிலும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் இரண்டு வகையான உதவித்தொகைகள் உள்ளன: பொது கல்வி உதவித்தொகை (General Scholarship) மற்றும் பெண்களுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை (Special Scholarship for Girls).
பொது கல்வி உதவித்தொகைக்கு தகுதிகள்:
12-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
2022-23, 2023-24, அல்லது 2024-25 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, அல்லது ஐடிஐ படிப்புகளில் இந்த ஆண்டு சேர்ந்திருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பெண்களுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகைக்கு தகுதிகள்:
10-ஆம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2022-23, 2023-24, அல்லது 2024-25 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
11-ஆம் வகுப்பு, ஐடிஐ, அல்லது டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்திருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4.50 லட்சம்-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உதவித்தொகை எவ்வளவு?
உதவித்தொகை மாணவர்களின் படிப்பைப் பொறுத்து மாறுபடும்:
• மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு: ஆண்டுக்கு ரூ.40,000 (இரண்டு தவணைகளில் ரூ.20,000).
• பொறியியல் மாணவர்களுக்கு: ஆண்டுக்கு ரூ.30,000 (இரண்டு தவணைகளில் ரூ.15,000).
• பட்டப்படிப்பு, டிப்ளமோ மாணவர்களுக்கு: ஆண்டுக்கு ரூ.20,000 (இரண்டு தவணைகளில் ரூ.10,000).
• பெண்களுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை: ஆண்டுக்கு ரூ.15,000.
இந்தத் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். பெண்களுக்கான சிறப்பு உதவித்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
• மாணவர்களின் வங்கிக் கணக்கு, IFSC எண், காசோலை
• வருமான சான்றிதழ்
• கல்வித்தகுதி சான்றிதழ்கள்
• ஆதார் எண்
• உயர்கல்வி சேர்க்கைக்கான சான்றிதழ்
இந்த ஆவணங்களைச் சேகரித்து, https://licindia.in/golden-jubilee-foundation என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 22, 2025. தகுதியுள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.