
டெல்லியில் நிலவும் காற்று மாசைக் குறைக்கும் வகையில் டெல்லி மக்கள் தங்களின் பழைய டீசல், பெட்ரோல் கார்களை கொடுத்துவிட்டு, புதிய எலெக்ட்ரிக் கார்களை பெறும் எக்சேஞ்ச் வசதி விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அல்லது தங்களின் பழைய கார்களை புதிய எலெக்ட்ரிக் கார்களாகவும் மாற்றிக்கொள்ளலாம்.
டெல்லி அரசின் போக்குவரத்துதுறை இது தொடர்பாக பதிவு செய்யும் செயல்பாட்டையும், பதிவு மையங்களையும் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அமைத்துள்ளது.
இதன் மூலம் டெல்லி மக்கள் தங்களுடைய பழைய டீசல்கார், பெட்ரோல் கார்களை அரசிடம் ஒரு குறிப்பிட்ட மதிப்பில் கொடுத்துவிட்டு, அதற்குப்பதிலாக எலெக்ட்ரிக் கார்களை பெற முடியும். அல்லது எலெக்ட்ரிக் கார்களாக மாற்றிக்கொள்ளலாம்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ பழைய பெட்ரோல், டீசல் கார்களை பெற்றுக்கொண்டு அதற்குப்பதிலாக புதிய எலெக்ட்ரிக் கார்களை மக்களுக்கு எக்சேஞ்ச் முறையில் வழங்க 10 நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்த நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்தபின், மக்கள் தங்களுக்கு விருப்பமான நிறுவனத்திடம் தங்களின் கார்களை கொடுத்துவிட்டு எக்சேஞ்ச் முறையில் எலெக்ட்ரிக் கார்களை பெறலாம். அதுமட்டுமல்லாமல் தங்களின் பெட்ரோல், டீசல் கார்களை பேட்டரியில் ஓடும் விதத்திலும் மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக தனியாக பொறியாளர்களையும் அந்த நிறுவனங்கள் வைத்துள்ளன.
டீசல், பெட்ரோல் கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றுவதற்கு தேவையான கிட்களை மக்கள் விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். இந்த கிட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனைசெய்யும் நிறுவனங்கள், கடைகள் முறைப்படி அரசிடம் அனுமதி பெற்ற நிறுவனங்களாக இருக்கும்.
நிறுவனங்கள் இந்த பணிக்காக நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள். கார்களுக்கு மின்னணு சாதனங்களைப் பொருத்தியபின் அதை பராமரிக்க வேண்டிய பொறுப்பும் அதை பொருத்திய நிறுவனங்களையே சேரும். இதற்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும்.
மின்னணு சாதனங்களைப் பொருத்தும் கார்களும், அதை பொருத்தும் நிறுவனங்களும் ஆண்டுக்கு ஒருமுறை தகுதிச்சான்று பெற வேண்டும். நிறுவனங்களிடம் போதுமான சாதனங்கள் இருக்கிறதா, தகுதியானவையாக இருக்கிறதா என்பது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியில் தற்போது 10 ஆண்டுகள் பழைமையான 1.50 லட்சம் டீசல் வாகனங்கள் ஓடுகின்றன, அதேபோன்று 15 ஆண்டுகளுக்கு மேலான 28 லட்சம் பெட்ரோல் கார்கள் இருக்கின்றன. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, 10 ஆண்டுகள் நிறைவடைந்த டீசல் வாகனங்கள் பதிவையும் 2022, ஜனவரி 1ம் தேதிக்குள் ரத்து செய்ய வேண்டும். வேறு மாநிலங்களில் பதிவு செய்திருந்தால், அதற்கு என்ஓசிசான்று பெற வேண்டும்.
பெட்ரோல், டீசல் கார்களை பேட்டரியில் ஓடும் கார்களாக மாற்றுவதற்கு கார்களின் திறனைப் பொறுத்து ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம்வரை செலவாகும் என உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.