Russia Ukrain Crisis: இது சரிப்பட்டு வராது - ரஷ்ய வியாபாரத்தை அதிரடியாக நிறுத்திய வால்வோ!

By Kevin KaarkiFirst Published Mar 1, 2022, 11:32 AM IST
Highlights

Russia Ukrain Crisis: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்க்கும்  வகையில் வால்வோ கார் மற்றும் வால்வோ டிரக் குழுமம் ரஷ்யாவில் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தியது.

வால்வோ கார் மற்றும் வால்வோ டிரக் நிறுவனம் ரஷ்யாவில் வியாபாரத்தை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கையை தொடர்ந்து வால்வோ நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கையை எடுத்த முதல் நிறுவனமாக வால்வோ இருக்கிறது.

"ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்வதில் உள்ள அபாயங்களை கருத்தில் கொண்டும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்து இருக்கும் தடை உத்தரவுகளை கருத்தில் கொண்டும் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை வால்வோ கார்ஸ் இனி ரஷ்ய சந்தையில் எந்த கார்களையும் வினியோகம் செய்யாது," என ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளரான வால்வோ கார் நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

கார் நிறுவனத்துடன் தொடர்பில்லாத வால்வோ AB நிறுவனமும் ரஷ்யாவில் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி இருக்கிறது. "உக்ரைன் உடனான ராணுவ எதிர்ப்பு, அப்பகுதியில் ஏற்பட்டுள்ள ஏற்றுமதி தடை உள்ளிட்ட காரணங்களால் வால்வோ குழுமம் தனது வியாபாரத்தை ரஷ்யாவில் நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது," என அந்நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார். 

ரஷ்யாவில் வால்வோ குழுமத்தின் ஒற்றை உற்பத்தி மையமாக கலுகா ஹெவி டிரக்-டியூட்டி ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் சுமார் 700 பேர் பணியாற்றி வந்தனர். வால்வோ மட்டுமின்றி டையம்லர் டிரக், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும் ரஷ்யாவுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்யப்போவதில்லை என தெரிவித்துள்ளன. 

இத்துடன் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ரெனால்ட் போன்ற நிறுவனங்களும் ரஷ்யாவில் வாகன உற்பத்தியை நிறுத்தி உள்ளன. இத்துடன் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான கள நிலவரத்தை உற்று கவனத்தி வருவதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

click me!