ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் செலுத்துவதற்கு வரி விதிப்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பதற்குச் சமம் என்றும் இது காப்பீட்டுத் துறையின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களில் 18% சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நீக்கப்பட வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஜூலை 28ஆம் தேதி நிதின் கட்கரி எழுதியுள்ள கடிதத்தில், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் செலுத்துவதற்கு வரி விதிப்பது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு வரி விதிப்பதற்குச் சமம் என்றும் இது காப்பீட்டுத் துறையின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்றும் கூறியுள்ளார்.
undefined
"மூத்த குடிமக்களுக்கு சிரமமாக இருப்பதால், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவதற்கான பரிந்துரையை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று நிதி கட்கரி எழுதியுள்ளார்.
நாக்பூர் மக்களவை உறுப்பினரான நிதின் கட்கரியின் கடிதம், நாக்பூர் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. காப்பீட்டுத் துறையில் உள்ள சவால்களையும் எடுத்துக்காட்டி இருக்கிறது.
"ஆயுள் காப்பீட்டின் மூலம் சேமிப்புகளை வேறுபடுத்துதல், உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்களுக்கான வருமான வரி விலக்கு மீண்டும் அறிமுகப்படுத்துதல் மற்றும் பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு" ஆகியவற்றை தொழிற்சங்கம் குறிப்பிட்டதாக நிதின் கட்கரி தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு 18% ஜிஎஸ்டிக்கு வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி தொடர்பான திருத்தங்கள் குறித்து ஆலோசனை நடத்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்தக் கவுன்சிலின் முந்தைய கூட்டம் ஜூன் 22ஆம் தேதி நடைபெற்றது.