
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் பங்குதாரராக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதற்காக, வெளிநாட்டுப் பொருட்களைத் தவிர்த்து, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
குஜராத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "நமது பொருளாதாரம் தற்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது, இதை மூன்றாம் இடத்திற்கு கொண்டு செல்ல நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இதற்கு வெளிநாட்டுப் பொருட்களைச் சார்ந்திருப்பதை நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.
"மேக் இன் இந்தியா"
விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் அனைவரும் "மேக் இன் இந்தியா" (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், "துரதிர்ஷ்டவசமாக, சிறிய கண்களைக் கொண்ட கணபதி சிலைகள் கூட வெளிநாடுகளில் இருந்து வருகின்றன. அவற்றின் கண்கள் கூட சரியாகத் திறக்கப்படாமல் உள்ளன." என்றார்.
இது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பிரதமர், கிராமப்புற வணிகர்கள் அனைவரும், எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டுப் பொருட்களை விற்க மாட்டோம் என்று உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், ஒவ்வொரு குடிமகனும் தங்கள் வீடுகளில் ஒருநாளில் எத்தனஐ வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம் என்ற பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"ஆபரேஷன் சிந்தூர்"
"ஆபரேஷன் சிந்தூர்" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இது, வெளிநாட்டுப் பொருட்களை நிராகரித்து, இந்தியாவின் உற்பத்தித் திறனை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
பிரதமரின் இந்தப் பேச்சு, உள்நாட்டுத் தொழில் வளர்ச்சி மற்றும் இந்தியப் பொருளாதாரத்தின் சுயசார்பு நிலையை நோக்கிய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.