
முன்பு, வேலை, தொழிலில் நிலைத்து நின்றபின் வீடு, கார், திருமணம் போன்ற கனவுகளை நனவாக்க கடன் வாங்குவார்கள். இப்போது, இளைஞர்கள் வீடு, கார், திருமணம் என காத்திருக்காமல் வாழ்க்கையை ரசிக்கவே பணத்தை செலவிடுகிறார்கள்.
கடந்த ஆறு மாதங்களில், நான்கு இந்தியர்களில் ஒருவர் விடுமுறையில் பிடித்த இடங்களுக்குச் செல்ல தனிநபர் கடன் வாங்கியுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. 2023-லும் இந்தப் போக்கு தொடர்கிறது. அழகான நகரங்கள், இடங்களுக்குச் பயணிக்க இளைஞர்கள் கடன் வாங்குகிறார்கள்.
டெல்லிக்குச் செல்ல 35% பேர் கடன் வாங்குகிறார்கள். அங்கு பல்வேறு இடங்களைப் பார்க்க, விருப்பமான ஹோட்டல்களில் தங்க இந்தக் கடனைப் பயன்படுத்துகிறார்கள். டெல்லிக்கு அடுத்தபடியாக ஹைதராபாத், மும்பை, பெங்களூரு போன்ற நகரங்கள் உள்ளன. இந்த நகரங்களில் சுற்றிப் பார்க்கவே இளைஞர்கள் தனிநபர் கடன்களை அதிகம் வாங்குகிறார்கள்.
பெருநகரங்களில் செலவு அதிகம். எங்கு செல்ல வேண்டுமானாலும் கேப் பதிவு செய்ய வேண்டும். உணவு, கேளிக்கைச் செலவும் அதிகம். அதனால் பயணக் கடன் வாங்குவோர் அதிகரித்துள்ளனர். பெருநகரங்களை விட இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களான லக்னோ, ஆக்ரா, ஜெய்ப்பூர் போன்ற நகரங்களில் இருந்து கடன் வாங்கி பெருநகரங்களுக்குச் சென்று ரசித்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். சிறிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு பெருநகரங்களில் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகம். அவர்கள் தங்கள் நிதிச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி விருப்பமான பயணங்களை மேற்கொள்கிறார்கள்.
பயணங்களுக்காக கடன் வாங்குபவர்களில் 65% பேர் தனியார் துறையில் வேலை செய்பவர்கள். 17% பேர் தொழில்முனைவோர். 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் கடன் வாங்குகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையினரும் கடன் வாங்குகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்கிப் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கோவா, காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் போன்ற இடங்களுக்குச் செல்லவே பலரும் விரும்புகிறார்கள். முதலிடத்தில் கோவா உள்ளது. வெளிநாட்டுப் பயணங்களில் தென்கிழக்கு ஆசியாவுக்கு 44% பேர் செல்கின்றனர். பயணக் கடன் அல்லது தனிநபர் கடன் வாங்கி ரசிப்பவர்களில் 30% பேர் ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை கடன் வாங்குகிறார்கள். 20% பேர் 50,000 முதல் ஒரு லட்சம் வரை கடன் வாங்குகிறார்கள். 19% பேர் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை கடன் வாங்கிப் பயணிக்கிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆறு மாதங்களில் 50,000 ரூபாய்க்கும் குறைவாக கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.
வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்குவோர் அதிகம். சுமார் 31% பேர் தங்கள் வீட்டை அழகுபடுத்த கடன் வாங்கியுள்ளனர். பைசா பஜார் தலைமைச் செயல் அதிகாரி சந்தோஷ் அகர்வால், மக்களின் மனப்போக்கு மாறிவிட்டது, தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய கடன் வாங்க முன்வருகிறார்கள் என்று கூறினார். இப்படியே கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் வங்கிகளுக்கு லாபம்தான்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.