
பான் கார்டையும் ஆதார் எண்ணையும் இணைப்பது தற்போது அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு செய்யப்படாவிட்டால், பல முக்கியமான நிதி மற்றும் அரசு சேவைகளில் சிக்கல்கள் ஏற்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பை செய்ய தவறினால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதுடன், பான் கார்டு செயலிழக்க (Inactive) செய்யப்படும் அபாயமும் உள்ளது.
பான்–ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி நெருங்கி வருவதால், தற்போது பலர் அவசரமாக இந்த பணியை முடிக்க முயற்சி செய்து வருகின்றனர். விதிகளின்படி, பான் மற்றும் ஆதார் இரண்டும் உள்ள அனைவரும் அவற்றை இணைக்க வேண்டும். மேலும், புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31க்குப் பிறகும் இணைக்காதவர்களுக்கு தாமத கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டியிருக்கும்.
2025 ஏப்ரல் 3 அன்று வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பான்–ஆதார் இணைக்கப்படாவிட்டால், அந்த பான் செயலிழக்கப்படும். மேலும், 2024 அக்டோபர் 1க்கு பிறகு பான் எண் பெற்றவர்களும், இந்த ஆண்டின் டிசம்பர் 31க்குள் ஆதாருடன் இணைக்க வேண்டும். முன்னதாக, அனைத்து நபர்களுக்கும் மே 31, 2024 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
பான் செயலிழந்தால், பல பிரச்சனைகள் ஏற்படலாம். வருமான வரி தாக்கல் (ITR) செய்வதில் சிரமம் ஏற்படும். வரி திருப்பிச் செலுத்தல் (Refund) தாமதமாகும். அதிக அளவில் TDS மற்றும் TCS கட்ட வேண்டிய நிலை உருவாகலாம். Form 26AS-ஐ பார்க்க முடியாது; TDS/TCS சான்றிதழ்களும் கிடைக்காது.
மேலும், புதிய வங்கி கணக்கு திறக்க முடியாது, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பெற முடியாது. வங்கியில் ரூ.50,000-ஐ மீறும் ரொக்கம் வைப்பு செய்யவும், ரூ.10,000-ஐ மீறும் பரிவர்த்தனைகள் செய்யவும் தடையுண்டாகும். KYC செயல்முறைகள் நிறுத்தப்படும்; அரசு சேவைகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட், பங்கு முதலீடுகளும் பாதிக்கப்படும். எனவே, கடைசி நாளுக்கு முன்பே பான்–ஆதார் இணைப்பை செய்து விடுவது மிகவும் அவசியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.