Omicron impact : ஒமைக்ரான் ஆட்டம் ஆரம்பம்.! ஒரே நாளில் ரு. 9 லட்சம் கோடி காலி.. கலங்கும் இந்திய பங்குச்சந்தை!

By Asianet TamilFirst Published Dec 20, 2021, 11:09 PM IST
Highlights

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொடங்கியபோது இந்தியா உள்பட உலக நாடுகளில் பங்குச் சந்தைகள் படுத்தன. கொரோனா இரு அலைகளினால் பங்குச் சந்தைகள் பாதிப்பைச் சந்தித்துவிட்டு இப்போதுதான் மெல்ல மீண்டு வந்தன.

ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தத் தொடங்கிய நிலையில், அது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.9 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொடங்கியபோது இந்தியா உள்பட உலக நாடுகளில் பங்குச் சந்தைகள் படுத்தன. கொரோனா இரு அலைகளினால் பங்குச் சந்தைகள் பாதிப்பைச் சந்தித்துவிட்டு இப்போதுதான் மெல்ல மீண்டு வந்தன. ஆனால், கொரோனா வைரஸ் உருமாறி கொரோனா ஒமைக்ரான் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், மீண்டு பங்குச் சந்தைகள் பாதிப்பைச் சந்திக்கத் தொடங்கியிருகின்றன. டெல்டா, டெடா பிளஸைவிட ஒமைக்ரான் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால், உலக நாடுகள் மீண்டும் சிக்கலைச் சந்தித்து வருகின்றன.

உலக நாடுகள் பலவற்றிலும் மீண்டும் பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் தீவிரமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தொழிற்சாலைகளின் உற்பத்தியில் சுணக்கம் ஏற்படும். இதனால் தொழில் துறை பெரும் சிரமத்தை எதிர்க்கொள்ள நேரிடலாம். மேலும் நாடுகளின் உள் நாட்டு மொத்த உற்பத்தியும் குறையும் ஆபத்து உள்ளது. இதுபோன்ற காரணங்களால், அதன் தாக்கம் பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதனால், பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது. இந்தப் பீதி இந்திய பங்கு வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.


ஏற்கெனவே கடந்த ஒரு வார காலமாகவே பங்குகள் மதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்றும் இன்னும் பங்குகள் விற்பனை குறைந்தது. கடந்த ஏப்ரலில் இரண்டாம் கரோனா அலை ஏற்பட்ட பிறகு வந்த பாதிப்புக்குப் பிறகு இன்று மிகப் பெரிய சரிவை இந்திய பங்குச் சந்தைகள் சந்தித்தன.  இன்றைய வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 1,189.73 புள்ளிகள் சரிந்து 55,822.01ஆகவும், நிப்டி 371 புள்ளிகள் சரிந்து 16,614.20ஆகவும் நிறைவடைந்தன. ஒரே நாளில் புள்ளிகள் சரிந்ததால், இன்று மட்டும் ரூ.9 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். இதனால், மும்பை பங்குச்சந்தையின் மூலதன மதிப்பு ரூபாய் 259.4 லட்சம் கோடியிலிருந்து 250 லட்சம் கோடியாக சரிந்துவிட்டது.
 

click me!