
நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வசூல் முன்எப்போதும் இல்லாத வகையில் 2022, மார்ச் மாதத்தில் ரூ.1.42 லட்சம் கோடியை எட்டியுள்ளது என மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய உச்சம்
தொடர்ந்து 9-வது மாதமாக ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடியைக் கடந்து செல்கிறது. கடந்த ஜனவரிமாதம் ஜிஎஸ்டிவசூல் ரூ.1.41 லட்சம் கோடியாக இருந்ததுதான் அதிகபட்சமாகும். அதைவிட மார்ச் மாதத்தில் ரூ.1.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
மார்ச் வசூல்
2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.ஒரு லட்சத்து 40ஆயிரத்து 986 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.25 ஆயிரத்து 830 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.25 ஆயிரத்து 830 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.74 ஆயிரத்து 470 கோடியாகும். இதில் செஸ் வரியாக ரூ.9 ஆயிரத்து 417 கோடி கிடைத்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வசூலானதைவிட 15 சதவீதம் அதிகமாக 2022 மார்ச் மாதம் ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது.2020ம் ஆண்டு மார்ச் மாதத்தைவிட 46 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரை ஜிஎஸ்டியின் சராசரி வசூல் ரூ.1.38 லட்சம் கோடியாகும்.
இறக்குமதி வரி
மார்ச் மாதத்தில் மத்திய மற்றும் மாநிலஅரசுகளின் ஒட்டுமொத்த வருவாய் என்பது மத்திய ஜிஎஸ்டி ரூ.65,646 கோடியாகும், மாநில ஜிஎஸ்டி வரி ரூ67,410 கோடியாகும். மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக மார்ச் மாதத்தில் ரூ.18,252 கோடி அளித்துள்ளது.
மார்ச் மாதத்தில் இறக்குமதி மூலம் கிடைத்த வருவாய் 25 சதவீதம் அதிகரி்த்துள்ளது, உள்நாட்டு பரிவர்த்தனை மூலம் வருவாய் 11 சதவீதமும் கடந்த ஆண்டு இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சராசரி ஜிஎஸ்டி வசூல் ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது, 2-வது காலாண்டில் ரூ.1.15 லட்சம் கோடியாகவும், 3-வது காலாண்டில் ரூ.1.30 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.