ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய MRF பங்கு மதிப்பு! இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் புதிய மைல்கல்

By SG BalanFirst Published Jun 14, 2023, 10:42 AM IST
Highlights

இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் பங்குகள் விலை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

சென்னையில் இருந்து இயங்கும் வாகன டயர் தயாரிப்பு நிறுவனமான எம்ஆர்எஃப் டயர்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டிப் பிடித்துள்ளது. செவ்வாயன்று அதன் பங்குகள் ரூ.1 லட்சத்தை கடந்த முதல் பங்கு என்ற பெருமையைப் பெற்றன. செவ்வாயன்று அதன் பங்குகள் ரூ.1,00,300 ஆக உச்சம் கண்டது. முடிவில் கிட்டத்தட்ட 2% உயர்ந்து, ரூ.99,988 இல் முடிந்தது.

டெண்டுல்கர், விராட் கோலி போன்ற கிரிக்கெட் வீரர்கள் MRF பிராண்டிற்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆதரவு அளித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற ஆண்டின் ஜூன் மாதத்தில், MRF பங்கு சுமார் 14,300 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இன்று அதன் மதிப்பு ரூ.1 லட்சம்.

ஆனால், இந்த புதிய மைல்கல்லை எட்டியது MRF பங்குகளை மிகவும் மதிப்புமிக்கதாக ஆக்குகிறதா என்றால், இல்லை. ஒரு நிறுவனத்தின் பங்கு எவ்வளவு மதிப்புமிக்கது அல்லது வலுவானது என்பதற்கான அடையாளம் அதன் விலை அல்ல. சந்தை மூலதனம், விலை-வருமானம் (P/E) விகிதம், லாபம் மற்றும் பிற வணிக அளவீடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது பங்குச்சந்தை வல்லுநர்கள் கருத்து.

உதாரணமாக, எம்ஆர்எஃப், ரூ.42,390 கோடி சந்தை மூலதனத்துடன், முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெறவில்லை. ஆனால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 17 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மூலதனத்துடன் முன்னணியில் உள்ளது. டிசிஎஸ் (TCS) சந்தை மூலதனம் 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. செவ்வாயன்று, ரிலையன்ஸ் பங்குகள் ரூ.2,520 ஆகவும், டிசிஎஸ் பங்குகள் ரூ.3,244 ஆகவும் முடிவடைந்தன.

MRF பங்கு இந்த மைல்கல்லை எப்படி எட்டியது? நிறுவனங்கள் தங்கள் பங்குகளை சில்லறை முதலீட்டாளர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதற்காக அடிக்கடி பங்குப் பிரிப்பு அல்லது போனஸ்களை மேற்கொள்ளும். ஆனால், MRF நிறுவனம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் அவ்வாறு செய்யவில்லை. இதன் விளைவாகவே அதன் பங்குகளின் விலை தொடர்ச்சியாக உயர்ந்தது.

"அதிக விலையுள்ள பங்கு என்பது ஒரு நிறுவனம் நன்றாகச் செயல்படுவதைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை, அதே போல் குறைந்த விலை பங்குகளைக் கொண்ட நிறுவனம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் அர்த்தமல்ல" என்று பிரைம் டேட்டாபேஸின் இயக்குநர் பிரணவ் ஹல்டியா சொல்கிறார். "முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் கவனம் செலுத்தினால், எதிர்காலத்தில் வளர்ச்சி சாத்தியம்" என்றும் அவர் கூறுகிறார்.

2022-23ஆம் ஆண்டிற்கான MRF நிறுவனத்தின் வருவாய் 23,008 கோடி. இது கடந்த ஆண்டைவிட 19% அதிகம். நிறுவனத்தின் லாபமும் 15% அதிகரித்து ரூ.768 கோடியாக இருந்திருக்கிறது.

click me!