விஸ்வரூபம் எடுக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி! ரிசர்வ் வங்கியின் இயக்குனராக நியமனம்!

By vinoth kumarFirst Published Aug 9, 2018, 11:50 AM IST
Highlights

தமிழக அரசியலில் திரை மறைவில் இயக்குபவரும் துக்ளக் இதழின் ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி ரிசர்வ் வங்கியின் இயக்குனராக நியமிக்கப்பட்டிருப்பது அவர் இந்திய அளவில் அதிகாரம் மிக்க நபராக விஸ்வரூபம் எடுத்திருப்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தமிழக அரசியலில் திரை மறைவில் இயக்குபவரும் துக்ளக் இதழின் ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி ரிசர்வ் வங்கியின் இயக்குனராக நியமிக்கப்பட்டிருப்பது அவர் இந்திய அளவில் அதிகாரம் மிக்க நபராக விஸ்வரூபம் எடுத்திருப்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ அவர்களுக்கு வலதுகரமாக இருந்தவர் ஆடிட்டர் குருமூர்த்தி. சோ தனது மறைவுக்கு பிறகு துக்ளக் இதழை நிர்வகிக்கும் பொறுப்பு ஆடிட்டர் குருமூர்த்திக்கே உண்டு என்று வெளிப்படையாக கூறி வந்தார். மேலும் அதற்கான ஏற்பாடுகளையும் சோ செய்து வைத்துவிட்டே காலமானார். துக்ளக் இதழ் மட்டும் அல்ல டெல்லியில் உள்ள தனது அரசியல் தொடர்புகளையும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு அறிமுகம் செய்துவைத்தவரும் சோ தான்.

அந்த வகையில் சோ தமிழகத்தில் செய்து வந்த திரை மறைவு அரசியலை சற்று வெளிப்படையாக செய்து வருபவர் ஆடிட்டர் குருமூர்த்தி. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய விவகாரத்தின் சூத்திரதாரி ஆடிட்டர் குருமூர்த்தி தான் என்பது பலருக்கு தெரிந்த ரகசியம். இதே போல் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இணைப்பும் கூட ஆடிட்டர் குருமூர்த்தியின் விளையாட்டு தான். அதுமட்டும் அல்ல ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பின் பின்னணியிலும் ஆடிட்டர் குருமூர்த்தியே இருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்த அளவிற்கு தமிழக அரசியலை ஆட்டுவித்து வரும் ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று முன்தினம் இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் மிகவும் நெருக்கமானவர் ஆடிட்டர் குருமூர்த்தி என்கிற தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது. இதுநாள் வரை திரைமறைவில் குருமூர்த்தி செய்த அரசியலுக்கு வெகுமதியாகவே ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

click me!