
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துவிட்டதையடுத்து, அனைத்து நாடுகளுக்கும் கட்டுப்பாடில்லா சர்வதேச விமானப் போக்குவரத்தை மார்ச் மாதம் மத்திய அரசு தொடங்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அடுத்தவாரம் டெல்லியில் நடக்கலாம் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை, விமானப்போக்குவரத்து மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கலந்தாய்வு நடத்தலாம் எனத்தெரிகிறது.
சமீபத்தில் சர்வதேச விமானப் பயணத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகளை திருத்தி வெளியிட்டது. அதில் எச்சரிக்கைப் பட்டியலில் உள்ளநாடுகள் எனும் பகுதி நீக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி இதேபோன்று முழுமையான கட்டுப்பாடில்லா விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால்,ஒமைக்ரான் வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது, அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, இயல்பான வர்த்தகரீதியான விமானப் போக்குவரத்து இம்மாதம் 28ம் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டது முதல் கடந்த 2020, மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 35 நாடுகளுடன் பயோ-பபுள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே மத்திய அரசு விமானப் போக்குவரத்து சேவையை செயல்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மத்திய விமானப் போக்குவரத்து துறைஅமைச்சர் ஜோதிர்ஆதித்யநா சிந்தியா இன்று அளித்த பேட்டியில் கூறுகையில் “ விமானங்களுக்குச் செலுத்தும் எரிபொருள் மீதான வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும். கொரோனாவுக்கு முன்பா தினசரி 4 லட்சம் பயணிகள் விமானத்தில்பயணித்து வந்தார்கள். கொரோனா 2-வது அலைக்குப்பின் மீண்டும் விமானப் போக்குவரத்து வேகமெடுக்கத் தொடங்கியது. ஆனால், ஒமைக்ரானால் கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டது
2021, அக்டோபர் மாதத்திலிருந்து விமானங்கள் இருக்கை முழுவதும் பயணிகளை அமர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டதால், நவம்பர் டிசம்பர் மாதங்களில் தினசரி 3.90 லட்சம் பயணிகள்வரை பயணித்தார்கள். ஆனால் ஒமைக்ரானால் பயணிகள் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
அடுத்த இரு மாதங்களில் கொரோனாவுக்கு முன்பிருந்த அளவு விமானப்பயணிகள் எண்ணிக்கை வந்துவிடும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.கடந்த ஜனவரி மாதம் 64.08 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணித்துள்ளனர். இது கடந்த 2021, ஜனவரியோடு ஒப்பிடுகையில் 17.14 சதவீதம் குறைவாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.