ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கப் போறீங்களா..? இனி அது கட்டாயம்..!

By Thiraviaraj RMFirst Published Dec 28, 2019, 1:06 PM IST
Highlights

ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் முறையை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்கிறது.
 

ஏ.டி.எம். எந்திரங்களில் ‘ஸ்கிம்மர்’என்ற கருவியை பொருத்தி பணத்தை திருடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மோசடிகளை தடுக்கும் வகையில் ஏ.டி.எம். எந்திரத்தில் அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பை ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக எஸ்பிஐ குறைத்தது.

இந்த நிலையில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க ஒரு முறை பயன்படுத்தும் ஓ.டி.பி முறையை ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்கிறது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஏ.டி.எம். எந்திரத்தில் நடக்கும் சட்டவிரோத பணபரிவர்த்தனையை குறைக்கும் விதமாக ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுப்பதற்கு ஒரு முறை ரகசிய எண் பயன்படுத்தும் திட்டத்தை நாங்கள் அறிமுகம் செய்கிறோம். இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை இந்த முறை அமலில் இருக்கும். இந்த ரகசிய எண் வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும். இது சட்டவிரோத பணபரிவர்த்தனைகளில் இருந்து ஏ.டி.எம். வாடிக்கையாளர்களை பாதுகாக்கும்.

ஜனவரி 1-ம்தேதி முதல் நாடு முழுவதும் இம்முறை செயல்பாட்டுக்கு வருகிறது. ஆனால் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் இதர வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்தால் இந்த பாதுகாப்பு முறை பொருந்தாது’’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய முறைப்படி இரவு நேரங்களில் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுத்தால் ஓ.டி.பி. வரும் வாடிக்கையாளர்கள் அந்த எண்ணை குறிப்பிட்ட பிறகு தான் எந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியும். 

click me!