crude oil price: பெட்ரோல், டீசல் விலையில் வருகிறது மாற்றம்?: கச்சா எண்ணெய் விலை 2 மாதங்களில் இல்லாத உயர்வு

By Pothy RajFirst Published May 30, 2022, 3:24 PM IST
Highlights

crude oil price  : ரஷ்யா மீது பொருளதாரத்தடையை எவ்வாறு தீவிரப்படுத்தலாம் என்பது குறித்து ஐரோப்பிய யூனியன் இன்றும் நாளையும் கூடி விவாதிக்கிறது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 120 டாலருக்கு மேல் உயர்ந்தது.

ரஷ்யா மீது பொருளதாரத்தடையை எவ்வாறு தீவிரப்படுத்தலாம் என்பது குறித்து ஐரோப்பிய யூனியன் இன்றும் நாளையும் கூடி விவாதிக்கிறது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 120 டாலருக்கு மேல் உயர்ந்தது.

கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சில நாட்கள் நீடித்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் சூழல் ஏற்படும். 

நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.8 டீசல் மீது லிட்டருக்கு ரூ.6 உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயரும்பட்சத்தில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தலாம்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடத்தது முதல் அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், கனடா ஆகியவை பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ரஷ்யாவிலிருந்து எந்தப் பொருட்ளையும் இறக்குமதி செய்யவும்தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய யூனியன் நாடுகள்,அமெரிக்காவுக்கு பெரும்பகுதி கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு சப்ளை செய்யும் நாடாக ரஷ்யா இருந்து வருகிறது. இந்தத் தடையால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்கத்தொடங்கியது. உச்சகட்டமாக பேரல் 140 டாலரை எட்டி, பின்னர் படிப்படியாகக் குறைந்து 110 டாலரில் இருந்து வந்தது.

இந்நிலையில் ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை வலுப்படுத்துவது குறித்து ஐரோப்பிய யூனியன் இன்றும், நாளையும் கூடி விவாதிக்கிறது. இந்த கூட்டத்தின் முடிவில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை மேலும் அதிகமானால், கச்சா எண்ணெய் விலை மேலும் உயரலாம் என்பதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை பேரல் 120 டாலருக்கு மேல் அதிகரித்தது.

தற்போது டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.96.72 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.89.62ஆகவும் இருந்து வருகிறது. மத்திய அரசு சமீபத்தில் உற்பத்தி வரியைக் குறைத்தபின் பல்வேறு மாநிலங்களும் வாட் வரியைக் குறைத்துள்ளன. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயரும்பட்சத்தில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும்.

ஐரோப்பிய யூனியன் நாடுகள் இன்றும், நாளையும் கூடி ரஷ்யா மீதான தடையை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3 மாதங்களைக் கடந்துள்ளது. ஆதலால், ரஷ்யா மீது முழுமையான பொருளாதாரத் தடை அதாவது ரஷ்யாவிலிருந்து எந்தப் பொருளும் இறக்குமதி செய்யக்கூடாது என்று தடைவிதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடைவிதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்தாலும், அதற்கு ஹங்கேரி மறுத்துவிட்டது. ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான நாடுகள் கச்சா எண்ணெய்க்கு ரஷ்யாவைத்தான் பெரும்பாலும் நம்பியுள்ளன.
 

click me!