வருமானவரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்கிறது - பட்ஜெட் அறிவிப்பு வெளியாகுமா?

Asianet News Tamil  
Published : Jan 12, 2017, 03:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
வருமானவரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்கிறது - பட்ஜெட்  அறிவிப்பு வெளியாகுமா?

சுருக்கம்

வருமானவரி விலக்கு உச்சவரம்பை தற்போதுள்ள ரூ.2.50 லட்சத்தில் இருந்து, ஆண்டுக்கு ரூ. 4 லட்சமாக உயர்த்த மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் ஆகும் மத்திய பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி, கடந்த மாதம் 8-ந் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார்.

கடும் அதிருப்தி

அதன்பின், வங்கிகள், ஏ.டி.எம்.மையங்களில் மக்கள் பணம் எடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

வங்கியில் மக்கள்தங்களின் சேமிப்பைக் கூட எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஏ.டி.எம்.களிலும், வங்கிகளிலும் பணம் இல்லாததால், மக்கள் திண்டாடி வருகின்றனர்.

பொருளாதாரம் மந்தம்

இதனால், மக்களின் வாங்கும் சக்தி குறைந்து, செலவை செயற்கையாக குறைக்கும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், சிறு வியாபாரிகளின் வியாபாரம் மந்தமாகி, பெரிய பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்களிலும் ஆள்குறைப்பு நடவடிக்கையை செய்து வருகின்றனர். இதனால், பொருளாதார வளர்ச்சி மந்த கதியை நோக்கி வருகிறது.

மோடி திட்டம்

இதையடுத்து, மக்களின் வலியையும், வேதனையையும் போக்கு விதத்திலும், பொருளாதார வளர்ச்சியை தூண்டிவிடவும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்த, வருமான வரி உச்சவரம்பை அதிகப்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த சலுகையை அரசு அறிவிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரி விகிதம்

இப்போதுள்ள முறைப்படி, ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் வருமானவரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்பின், ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 20 சதவீதம், ரூ. 10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு வருகிறது.

ரூ.4 லட்சமாக..

இந்நிலையில், வருமானவரி விலக்கு ரூ. 4 லட்சமாக அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

புதிய வரம்பு

புதிதாக ஒரு வரம்பு கொண்டு வரப்பட்டு, ஆண்டுக்கு ரூ. 4 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு 10 சதவீதம் வருமான வரி விதிக்க ஆலோசிக்கப்படுகிறது.

அடுத்ததாக, ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 15 சதவீதம் வருமான வரியும், ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம்வரை ஊதியம் பெறுவோருக்கு 20 சதவீதம் வரியும், ரூ.20 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் பெறுவோருக்கு 30 சதவீதம் வரியும் விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய வருமான உச்சவரம்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், நடுத்தரப் குடும்பத்து பிரிவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைமுகவரி வசூல் சரிவு

இது குறித்து மத்திய நேரிடி வரிகள் வாரியத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “நடப்பு நிதியாண்டில், நேர்முக வரியைக் காட்டிலும், மறைமுக வரிகள் வேகமாக வசூல் ஆகியுள்ளது.

அக்டோபர் மாதம் வரை மறைமுக வரிகளான கலால்வரி, சேவை வரி, உற்பத்தி வரி ஆகியவை 24 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே சமயம், நேர்முக வரிகள் 15 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளன.

மத்திய பட்ஜெட்டில்

ஆனால், ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், மறைமுக வரிகள் 20 முதல் 30 சதவீதம் சரிந்துள்ளது. இதைச் சரிக்கட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வரலாம்'' எனத் தெரிவித்தார்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தாறுமாறாக உயரப்போகும் தங்கம்..! அதிர வைக்கும் ரகசியம்..! இந்திய- சீனாவின் 'டாலரைசேஷன்' விளையாட்டால் உச்சம்..!
ரூ.13 லட்சம் வரை வருமான வரி விலக்கு? பட்ஜெட் 2026-ல் உங்களுக்கு கிடைக்கப்போகும் நன்மை..!