ஆன்லைனில் தரமற்ற பொருட்கள் விற்பனை! அமேசான், பிளிப்கார்ட்டில் BIS ரெய்டு

அமேசான், பிளிப்கார்ட் குடோன்களில் இந்திய தர நிர்ணய அமைப்பு சோதனை நடத்தியது. சான்றிதழ் இல்லாத பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டெக்விஷன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அந்நிறுவனத்தில் 7,000க்கும் மேற்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


அமேசான், பிளிப்கார்ட் போன்ற முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களின் குடோன்களில் இந்திய தர நிர்ணய அமைப்பு அதிரடி சோதனை நடத்தியுள்ளது. தரமற்ற பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. லக்னோ, குருகிராம், டெல்லி போன்ற நகரங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

மார்ச் 7 அன்று லக்னோவில் உள்ள அமேசான் கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில், 215 பொம்மைகள் மற்றும் 24 ஹேண்ட் பிளெண்டர்கள் BIS சான்றிதழ் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு முன்னதாக, பிப்ரவரி 2025-ல் குருகிராமில் உள்ள அமேசான் கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் 58 அலுமினிய ஃபாயில்கள், 34 தண்ணீர் பாட்டில்கள், 25 பொம்மைகள், 20 ஹேண்ட் பிளெண்டர்கள், 7 பிவிசி கேபிள்கள், இரண்டு உணவு கலவை இயந்திரங்கள் மற்றும் ஒரு ஸ்பீக்கர் ஆகியவை சான்றிதழ் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Latest Videos

இதேபோல், குருகிராமில் உள்ள பிளிப்கார்ட் குடோனில் நடைபெற்ற சோதனையில் 534 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில்கள், 134 பொம்மைகள் மற்றும் 41 சான்றிதழ் இல்லாத ஸ்பீக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

டெக்விஷன் இன்டர்நேஷனல்:

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் நடந்த இந்த விதிமீறல்கள் டெக்விஷன் இன்டர்நேஷனல் (Techvision International Pvt Ltd) நிறுவனத்துடன் தொடர்புடையவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள டெக்விஷன் நிறுவனத்தின் இரண்டு இடங்களில் BIS அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சுமார் 7,000 எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர்கள், 4,000 எலக்ட்ரிக் உணவு கலவை இயந்திரங்கள், 95 எலக்ட்ரிக் ரூம் ஹீட்டர்கள் மற்றும் 40 கேஸ் ஸ்டவ்கள் BIS சான்றிதழ் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Digismart, Activa, Inalsa, Cello Swift மற்றும் Butterfly போன்ற பிராண்டுகளின் சான்றிதழ் இல்லாத பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட பிறகு, BIS சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை டெக்விஷன் நிறுவனத்தின் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விதிமீறலுக்கு என்ன தண்டனை?

BIS சட்டத்தின்படி, தவறு செய்தவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படும். மேலும், விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பை விட பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படலாம். அதோடு இரண்டு வருடம் வரை சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

சந்தையில் கிடைக்கும் பொருட்கள் தரமானதாக இருக்கிறதா என்பதை பி.ஐ.எஸ்.தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
சந்தையில் கிடைக்கும் பல்வேறு நுகர்வோர் பொருட்களை பி.ஐ.எஸ்.வாங்கி, அவற்றை தரமானதா என பரிசோதனை செய்கிறது.
பொதுவாக பயன்படுத்தப்படும் பிரஷர் குக்கர்கள், ஹேண்ட்-ஹெல்ட் பிளெண்டர்கள், உணவு கலவை இயந்திரங்கள், எலக்ட்ரிக் அயன் பாக்ஸ்கள், ரூம் ஹீட்டர்கள், பிவிசி கேபிள்கள், கேஸ் ஸ்டவ்கள், பொம்மைகள், இரு சக்கர வாகன ஹெல்மெட்கள், ஸ்விட்சுகள், சாக்கெட்டுகள் மற்றும் அலுமினிய ஃபாயில்கள் போன்ற பொருட்கள் பி.ஐ.எஸ். மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

தரமற்ற பொருட்களால் ஏற்படும் ஆபத்துகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசு BIS சான்றிதழை கட்டாயமாக்கியுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட், மீஷோ, மிந்த்ரா, பிக் பாஸ்கெட் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களில் பி.ஐ.எஸ். சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்ட பிறகும், சான்றிதழ் இல்லாத பொருட்கள் விற்பனை செய்யப்படுவது பி.ஐ.எஸ். சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

BIS முத்திரை ஏன்?

ISI முத்திரை இல்லாத அல்லது தவறான உரிம எண்ணுடன் (CM/L எண்) கூடிய ISI முத்திரை கொண்ட பொருட்கள் சான்றிதழ் இல்லாதவையாக கருதப்படும். இந்தச் சான்றிதழ் இல்லாத பொருட்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான தரநிலையைப் பூர்த்தி செய்யாதவை ஆகும். எனவே அவை நுகர்வோருக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது.

பொருட்கள் வாங்கும் போது சான்றிதழ் முத்திரை இருக்கிறதா என்று பார்க்குமாறு பி.ஐ.எஸ். மக்களிடம் கேட்டுக்கொள்கிறது. BIS Care மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி ISI முத்திரை மற்றும் உற்பத்தியாளரின் உரிம எண்ணை சரிபார்க்கலாம். BIS சான்றிதழ் பெற்ற பொருள்தானா என்பதை உறுதிப்படுத்தலாம். மேலும், ISI முத்திரை இல்லாத பொருட்கள் அல்லது BIS சான்றிதழ் பெறாத பொருட்களின் தரம் குறித்தும் புகாரளிக்கலாம்.

click me!