அக்டோபர் ஜிஎஸ்டி கலெக்‌ஷன் 1.72 லட்சம் கோடி! 2வது அதிகபட்ச வசூல் சாதனை!

By SG Balan  |  First Published Nov 1, 2023, 5:41 PM IST

ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த 6 ஆண்டுகளில் 2வது அதிகபட்ச மாதாந்திர ஜி.எஸ்.டி. வருவாய் அக்டோபர் மாதத்தில் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாத வருவாயைவிட 13 சதவீதம் அதிகம்.


ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவை வரி முறை 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி மாதம்தோறும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கணக்கு வெளியிடப்பட்டு வருகிறது.

கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடி என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும் தகலின்படி, நாடு முழுவதும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த 6 ஆண்டுகளில் 2வது அதிகபட்ச மாதாந்திர ஜி.எஸ்.டி. வருவாய் அக்டோபர் மாதத்தில் கிடைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ஜி.எஸ்.டி. வருவாய் அக்டோபர் மாதத்தில் ரூ.1,72,003  கோடி கிடைத்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.30,062 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.38,171 கோடி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.91,315 கோடி வசூல் ஆகியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இறக்குமதி வரியாகக் கிடைத்த ரூ.1,294 கோடியும் அடங்கும். இதற்கு முன் 2023 ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி வசூலானது. அதுவே இதுவரை ஒரே மாதத்தில் கிடைத்த அதிகபட்ச ஜிஎஸ்டி வருவாய் ஆகும்.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், அக்டோபர் 2023க்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் 13 சதவீதம் அதிகமாகும். அதேபோல், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைக்கும் வருவாயும் முந்தைய ஆண்டை விட 13 சதவீதம் கூடியிருக்கிறது. 2023-24 நிதியாண்டிற்கான சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல்  ரூ.1.66 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இருந்ததை விட 11 சதவீதம் அதிகமாகும்.

click me!