Scam in Stock Market : கடந்த ஓரி வாரத்தில் இரண்டு வெவ்வேறு பங்குச் சந்தை மோசடிகளில், 2 முதலீட்டாளர்கள் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதுபோன்ற இணைய வழி மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் இப்பொது ஸ்டாக் மார்க்கெட்டில் ஆர்வம் காட்டி வரும் சாமானிய மக்கள் கூட தங்களுடைய சிறிய சேமிப்பை இழக்க நேரிடுகிறது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். சரி மோசடி செய்யும் நபர் உங்களை ஏமாற்ற முயற்சிக்கும்போது எப்படி எப்படி நாம் அடையாளம் காண்பது?
இந்த வகை மோசடிகளில் இருந்து உங்களையும் உங்கள் சேமிப்பையும் பாதுகாக்க ஏதாவது வழி இருக்கிறதா? மோசடிகளில் இருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால், இதுபோன்ற பங்குச் சந்தை மோசடிகளின் செயல்பாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டியை உயர்த்திய வங்கிகள்! புதிய சேமிப்பைத் தொடங்க பெஸ்டு சாய்ஸ்!
1.97 கோடி இழந்த கணக்காளர்
அகமதாபாத்தின் வாசனாவைச் சேர்ந்த 88 வயதான ஓய்வுபெற்ற பட்டயக் கணக்காளர், ஸ்டாக் மார்க்கெட் மோசடியில் சுமார் 1.97 கோடி ரூபாயை இழந்துள்ளார். அகமதாபாத் சைபர் கிரைம் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட அவரது FIRல், இந்த மோசடி குறித்து விளக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாத முதல் வாரத்தில் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. தன்னை சுனில் சிங்கானியா என்று அடையாளப்படுத்திக் கொண்டார் அந்த நபர், தான் கரண்வீர் தில்லான் என்ற பங்குச் சந்தை நிபுணருடன் பணிபுரிவதாகக் கூறியுள்ளார்.
மேலும் சிங்கானியா அவரை "ஸ்டாக் வான்கார்ட் 150" என்ற வாட்ஸ்அப் குழுவில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அந்த குழுவில் அங்கு சிங்கானியாவும், தில்லானும் பல்வேறு பங்குச் சந்தை முதலீட்டு குறிப்புகள் மற்றும் சில நுணுக்கங்களை பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். அந்த குழுவில் இன்னும் பல பங்கேற்பாளர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர், பாதிக்கப்பட்ட நபர் “ஸ்டாக் வான்கார்ட் (எக்ஸ்எம்-5)” என்ற மற்றொரு வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்பட்டார் என்று FIRல் கூறப்பட்டுள்ளது. அந்த குழுவிலும் சிங்கானியாவும், தில்லானும் முதலீட்டு ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ள வீடியோ கான்பரன்ஸ் நடத்தி வந்தனர். ஒரு மாதத்திற்குள், குழுவின் சில உறுப்பினர்கள் சிங்கானியா மற்றும் தில்லான் பகிர்ந்து கொண்ட குறிப்புகளின் அடிப்படையில் பங்குச் சந்தையில் பெற்ற லாபத்தைப் பற்றி கூற துவங்கியுள்ளனர்.
மேலும் அந்தக் கூற்றுகள் உண்மையானவை என்று நம்பி, படேல் தனது பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கி யுள்ளார்.ஒரு கட்டத்தில் அந்த மோசடி செய்பவர்கள், அவரை தாங்கள் இயக்கும் ஒரு இணையதளத்தில் உள்நுழையச் சொல்லியுள்ளனர். அது தான் "app.alicexa.com" என்ற இணையதளம். அதன் பிறகு தான் பாதிக்கப்பட்ட அந்த நபரின் ஸ்டாக் மார்க்கெட் மோசடிக்கு உள்ளாகியுள்ளது. மிக குறுகிய காலத்தில் அவரிடம் இருந்து 1.97 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
சரி இதிலிருந்து எப்படி தப்பிப்பது?
முதலில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம், காரணம் மோசடி செய்பவர்கள் நாம் முதலீடு செய்யும் பணத்தை, ஒரு சில வாரங்களில் இரட்டிப்பாக அல்லது மும்மடங்காக திருப்பி எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி தான் ஆசைகளை தூண்டுகின்றனர். சில போலியான தகவல்களையும், இதற்காக அவர்கள் உருவாக்கி நமக்கு நம்பிக்கை வரும் வண்ணம் செய்கின்றனர்.
வாட்ஸ் அப் குழுவில் நம்மை போல இணைபவர்களின் சாதனை கதைகளையும் நாம் உடனே நம்பிவிட கூடாது. அவர்களும் அந்த மோசடி குழுவின் அங்கமாக இருக்கலாம். மேலும் முதலீடு குறித்த எந்த ஒரு ஆலோசனையை பெரும் முன், அவர்கள் SEBI அல்லது RBI மூலம் அங்கீகரிக்கப்பட்ட, லைசன்ஸ் வாங்கிய நபர்களா என்பதை நாம் நிச்சயம் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையற்ற லிங்குகள் மற்றும் குறுஞ்செய்தியில் வரும் லிங்குகளை கிளிக் செய்து, நமது பங்குச்சந்தை குறித்த விவரங்களையும், அல்லது நமது வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பாக கடவுச்சொல் போன்ற விஷயங்களையும் கொடுக்காமல் இருப்பதன் மூலம் நிச்சயம் இந்த வகை மோசடியில் இருந்து நம்மால் நம்மை காத்துக் கொள்ள முடியும்.
ஸ்டாக் மார்க்கெட் என்பது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்றாலும் கூட உரிய பயிற்சி மூலமாகவும், சரியான வழிகாட்டுதல் மூலமாகவும் அனைவராலும் இதில் பணம் ஈட்ட முடியும், ஆனால் அது விரைவானது அல்ல என்றும் அதற்கு அதிக காலம் தேவைப்படும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.