
ஆன்லைன் சில்லறை விற்பனையில் முன்னணியில் உள்ள அமேசான் இந்தியா ஒரு முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து ஆர்டர்களுக்கும் ரூ.5 சந்தை கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரைம் உறுப்பினர்களும் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ரூ.5 சந்தை கட்டணத்தை ஒவ்வொரு ஆர்டருக்கும் ஒரு முறை மட்டுமே செலுத்தினால் போதும் என்று அமேசான் தெரிவித்துள்ளது. இது மொத்த பில்லுடன் சேர்க்கப்படும்.
இந்த கூடுதல் கட்டணம் குறித்து அமேசான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்க இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான பிராண்டுகள் மற்றும் பொருட்களைக் கொண்ட இந்த தளத்தை நிர்வகிக்க இது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அமேசான் பிரைம் உறுப்பினராக இருந்தால் பல்வேறு சலுகைகளை அனுபவிக்க முடியும். ஆனால், தற்போது அமேசான் பிரைம் உறுப்பினர்களிடமும் ஒவ்வொரு ஆர்டருக்கும் பிளாட்ஃபார்ம் கட்டணம் வசூலிப்பதை நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. சில குறிப்பிட்ட விதிவிலக்குகள் மட்டும் பிரைம் உறுப்பினர்களுக்கு கிடைக்கும். அவை பற்றி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செய்தியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
பொது வாடிக்கையாளர்கள் மற்றும் பிரைம் உறுப்பினர்கள் இந்த சந்தை கட்டணத்தை செலுத்த வேண்டும். ரசீதுகளில் இந்த கட்டணம் தனித்தனியாகக் காட்டப்படும். இந்த கட்டணத்தில் தொடர்புடைய வரிகளும் அடங்கும்.கிஃப்ட் கார்டுகள் வாங்கும்போது இந்த சந்தை கட்டணம் பொருந்தாது. அமேசான் பிசினஸ், பஜார், அமேசான் நவ், அமேசான் ஃப்ரெஷ் ஆர்டர்களுக்கும் இந்த கட்டணம் கிடையாது. ரீசார்ஜ், பில் செலுத்துதல், டிக்கெட் முன்பதிவு, டிஜிட்டல் சந்தாக்களுக்கும் இந்த கட்டணம் கிடையாது.
இதுபோன்ற சந்தை கட்டணம் சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செயலிகளில் ஏற்கனவே உள்ளது. ஆரம்பத்தில் ரூ.2 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.11 வரை உயர்ந்துள்ளது. இந்த கூடுதல் வருவாய் நிறுவனங்களின் நிதி அறிக்கைகளில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ரூ.5 கட்டணம் சிறிய தொகையாகத் தோன்றினாலும், அடிக்கடி ஷாப்பிங் செய்பவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கலாம். குறிப்பாக பிரைம் உறுப்பினர்கள் இதை கூடுதல் சுமையாக உணரலாம். ஏனெனில் அவர்களுக்கு இலவச ஷிப்பிங் வசதி உள்ளது. அந்த பணத்தை இப்படி வசூலிப்பதாக பிரைம் பயனர்கள் நினைக்கலாம். இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறும் போது, இதுபோன்ற கட்டணங்கள் நிறுவனத்தின் வருவாயை நேரடியாக அதிகரிக்க உதவும் ஒரு வழியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.