
யமஹா நிறுவனம் ஏரோக்ஸ் 155 மாடலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. சந்தையில் யமஹாவின் முதல் பிரீமியம் ஸ்கூட்டர் மாடலாக அறிமுகமான ஏரோக்ஸ் 155 யமஹா எதிர்பார்ப்பை மீறி விற்பனையாகி வருகிறது. இந்த மாடலில் யமஹா R15 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் ரூ. 1.32 லட்சம் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கூட்டர் இத்தகைய வரவேற்பை பெறும் என யமஹா எதிர்பார்க்கவே இல்லை. இதுவரை நடைபெற்று இருக்கும் முன்பதிவுகள் யமஹா நிறுவனத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்கூட்டரின் வினியோகம் தாமதமாகி இருக்கிறது. இந்த மாடல் நாடு முழுக்க தேர்வு செய்யப்பட்ட யமஹா புளூ ஸ்கொயர் விற்பனையாளர்களிடம் மட்டுமே கிடைக்கிறது.
தற்போதைய நிலவரப்படி ஏரோக்ஸ் மாடலை முன்பதிவு செய்தவர்கள் 90 நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதனை குறைக்கும் முயற்சிகளில் யமஹா மோட்டார் இந்தியா ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்டோமொபைல் துறையில் மற்ற நிறுவனங்களை போன்றே யமஹா நிறுவனமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது யமஹா வினியோக பணிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
யமஹா ஏரோக்ஸ் பிளாக் அல்லது புளூ மாடலை வாங்க 45 முதல் 60 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. சில வாடிக்கையாளர்கள் தாமதத்திற்கான காரணத்தை புரிந்து கொள்கின்றனர். எனினும், சிலர் அதிக காலம் காத்திருக்க முடியாது என முன்பதிவுகளை ரத்து செய்து விடுகின்றனர். தற்போது யமஹா புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களில் மட்டும் கிடைக்கும் நிலையில், விரைவில் அனைத்து விற்பனை மையங்களிலும் ஏரோக்ஸ் 155 மாடலை விற்பனைக்கு கொண்டு வர யமஹா முடிவு செய்துள்ளது.
யமஹா ஏரோக்ஸ் 155 மாடலில் 155சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வேரியபில் வால்வு ஆக்டுவேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.79 பி.ஹெச்.பி. திறன், 13.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டரில் 14 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன.
இவைதவிர ஏரோக்ஸ் 155 மாடலில் ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர், ABS, சைடு ஸ்டாண்டு கட்-ஆஃப் மற்றும் ப்ளூடூத் வசதி கொண்ட LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.