ஆட்டோமொபைல் துறையின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திராவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் கோவையில் அமையவுள்ளது
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நன்கு அறியப்பட்ட மையமாக இருக்கும் கோவையை நோக்கி பல்வேறு நிறுவனங்கள் தங்களது பார்வையை செலுத்தியுள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக, பன்னாட்டு நிறுவனங்களில் முக்கியத் தேர்வாக கோவை விளங்குகிறது. நிறுவனங்களின் தொழில்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதால், சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் கோவையில் தங்களது முதலீடுகளை செய்ய துவங்கியுள்ளன.
அந்த வகையில், ஆட்டோமொபைல் துறையின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திராவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் கோவையில் அமையவுள்ளது. மென்பொருள் வரையறுக்கப்பட்ட வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை மஹிந்திரா குழுமம் கோவையில் அமைக்கவுள்ளது. இந்த மையம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதற்கிடையே, இந்த மையமானது அறிவு மையமாக செயல்படும் எனவும், மென்பொருள் வரையறுக்கப்பட்ட வாகனங்களில் மஹிந்திராவின் முயற்சிக்கு சக்தி அளிக்கும் எனவும் மஹிந்திரா & மஹிந்திராவின் துணைத் தலைவர் சங்கர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் உள்ள SVB டெக் பார்க்கில் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் மஹிந்திராவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பல்வேறு பணிகளுக்கான ஊழியர்கள் தேர்வை அந்நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், பல்வேறு பணிகளுக்கு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
“எங்கள் குழுவின் எதிர்கால தயாரிப்புகளுக்கு ஆற்றல் மிக்க ஒரு முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையத்தை அமைக்க விரும்பியபோது, மஹிந்திரா ரிசர்ச் வேலியை அமைக்க சென்னையை தேர்ந்தெடுத்தோம். இப்போது, ஆட்டோ தொழில்நுட்பத்தில் அடுத்த பெரிய விஷயமான மென்பொருள் வரையறுக்கப்பட்ட வாகனங்களுக்காக நாங்கள் கோவையை தேர்வு செய்துள்ளோம்.” என சங்கர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் ஏற்கனவே ராபர்ட் போஷின் உலகளாவிய பொறியியல் மையமான Bosch Global Software Technologies உள்ளது. பொறியியல் கல்லூரிகள் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஒரு பெரிய நெட்வொர்க்கானது, அதனை ஆட்டோ தொழில்நுட்ப திறமைகளுக்கான மையமாக மாற்றி வரும் நிலையில், மஹிந்திரா குழுமத்தின் வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
உலகளாவிய பல்வேறு நிறுவனங்கள் மென்பொருள் வரையறுக்கப்பட்ட வாகனங்களை (SDVs) நோக்கி கவனம் செலுத்தி வருகின்றன. மென்பொருள் வரையறுக்கப்பட்ட வாகனங்கள் (SDV) என்பது, ஸ்மார்ட்போனில் ஆப்ஸ் அப்டேட் செய்வது போன்ற எளிமையான செயல்பாட்டின் மூலம் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் காரின் திறன் மற்றும் அதன் கட்டமைப்பின் பல்வேறு அம்சங்களையும் குறிக்கிறது. உலகளாவிய கார் சந்தை பெருகி வரும் நிலையில், கார்களின் வடிவமைப்பு மற்றும் பரிணாம வளர்ச்சி இரண்டிலுமே மென்பொருள் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் சில வாகங்களில் ரிமோட் மூலமான அப்டேட்களை செய்ய முடியும். இந்த எதிர்கால வளர்சிக்கு மஹிந்திரா & மஹிந்திராவும் தயாராகி வருவதாக வேணுகோபால் தெரிவித்துள்ளார்.