27,000+ சார்ஜிங் நிலையங்கள்.. ஒட்டுமொத்த இந்தியாவே மாறுது.. EV ஓட்டுநர்களுக்கு சூப்பர் நியூஸ்

Published : Dec 29, 2025, 12:26 PM IST
EV charging stations

சுருக்கம்

பெட்ரோல், டீசல், EV சார்ஜிங் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் 'எரிசக்தி நிலையங்கள்' அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது சாலைப் பாதுகாப்பையும், கிராமப்புற வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்துகிறது.

இந்தியாவில் மின்சார வாகனங்கள் (EV) பயன்பாடு கடந்த சில ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, மின்சார கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை மக்கள் அதிகமாக தேர்வு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த மாற்றத்தை ஊக்குவிக்க அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

அதன் முக்கிய விளைவாக, 2025-க்குள் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் 27,000-க்கும் அதிகமான மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையின்படி, மின்சார வாகனங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அரசின் FAME-II திட்டத்தின் கீழ் மட்டும் 8,932 சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதே நேரத்தில், அரசு கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தங்களது சொந்த முதலீட்டில் 18,500-க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிறுவனங்களை உருவாக்கியுள்ளன. இதன் மூலம், பெட்ரோல் பங்குகளில் கிடைக்கும் மொத்த EV சார்ஜிங் நிலையங்கள் 27,432 ஆக உயர்ந்துள்ளன.

பெட்ரோல் பங்குகள் போன்ற மக்கள் அடிக்கடி வருகை தரும் இடங்களில் சார்ஜிங் வசதி இருப்பது, ஓட்டுநர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கிறது. நீண்ட தூர பயணங்களில் சார்ஜ் குறையும் என்ற பயம் குறைவதோடு, EV வாகனங்களை வாங்கும் நம்பிக்கையும் அதிகரிக்கும். இதுவே இந்தியாவில் மின்சார வாகன சூழல் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தூணாக பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டமாக, அரசு “எரிசக்தி நிலையங்கள்” என்ற புதிய கருத்தை முன்னெடுத்து வருகிறது. 2024-25 முதல் 2028-29 வரை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 4,000 புதிய எரிசக்தி நிலையங்களை உருவாக்க உள்ளன. இங்கு பெட்ரோல், டீசல், CNG, LNG, உயிர் எரிபொருள் மற்றும் EV சார்ஜிங் வசதிகள் ஒரே இடத்தில் கிடைக்கும்.

2025 நவம்பர் 1 நிலவரப்படி, நாடு முழுவதும் 1,064 எரிசக்தி நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. கனரக வாகன ஓட்டுநர்களுக்காக “அப்னா கர்” திட்டத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட டிரக் ஓய்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது சாலைப் பாதுகாப்பையும், கிராமப்புற வேலைவாய்ப்புகளையும் மேம்படுத்துகிறது.

இதற்கிடையில், உயிர் எரிபொருள் துறையும் 2025-ல் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலப்பு சராசரியாக 19.24% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ரூ.1.55 லட்சம் கோடிக்கு மேல் அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டது, கார்பன் உமிழ்வும் கணிசமாக குறைந்துள்ளது. பானிபட் மற்றும் நுமலிகரில் இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலைகள் தொடங்கப்பட்டிருப்பது, இந்தியாவின் சுத்தமான எரிசக்தி பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1 லட்சம் சொளையா லாபம்.. ஸ்கோடாவின் No.1 SUV இப்போது இன்னும் மலிவு விலையில்
XUV 7XO-வில் 540° கேமரா.. மூன்று ஸ்கிரீன், AI சிஸ்டம்.. மஹிந்திராவின் மாஸ்டர் மூவ்