
பிஒய்டி குழுமத்தின் பிரீமியம் கார் பிராண்டான டென்சா, இந்தியாவின் எலக்ட்ரிக் கார் சந்தையில் புதிய போட்டியை உருவாக்க தயாராகி வருகிறது. 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் டென்சா இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப கட்டமாக இசட்9 ஜிடி மற்றும் D9 ஆகிய இரண்டு மாடல்களை கொண்டு வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் இசட்9 ஜிடி, வழக்கமான எலக்ட்ரிக் காராக இல்லாமல் அதிக செயல்திறன் கொண்ட பிரீமியம் ஷூட்டிங்-பிரேக் மாடலாக களமிறங்க உள்ளது. பிஒய்டி தற்போது இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களைவிட டென்சா பிராண்டை அதிக விலை மற்றும் பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இசட்9 ஜிடி-யின் மிகப்பெரிய பலமே அதன் சக்திவாய்ந்த மூன்று மோட்டார் அமைப்புதான். காரின் முன்பக்கத்தில் ஒரு எலக்ட்ரிக் மோட்டாரும், பின்புறத்தில் இரண்டு மோட்டார்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இவை இணைந்து அதிகபட்சமாக 850 கிலோவாட், அதாவது சுமார் 1,156 பிஎஸ் பவரை வழங்குகின்றன. இதன் அதிகபட்ச டார்க் 1,210 நியூட்டன் மீட்டர். இந்த அளவுக்கு அதிகமான பவர் இருப்பதால், இசட்9 ஜிடி வெறும் 2.7 விநாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாக உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 270 கி.மீ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற தோற்றம் கொண்டிருந்தாலும், வடிவமைப்பைப் பொறுத்தவரை இது ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான திறன் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டில் அதிகம் விற்ற ஸ்கூட்டர்கள் எவை? வாங்கும் முன் இந்த டாப் 5 லிஸ்ட்டை பாருங்க
ரெஞ்ச் மற்றும் சார்ஜிங் விஷயத்திலும் இசட்9 ஜிடி கவனம் ஈர்க்கிறது. இதில் 122.49 kWh திறன் கொண்ட இரண்டாம் தலைமுறை பிளேட் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. WLTP சோதனை முறையின்படி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 600 கி.மீ வரை பயணிக்க முடியும் என நிறுவனம் கூறுகிறது. இதனுடன் FLASH சார்ஜிங் என்ற அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 1,500 kW வரை சார்ஜிங் சக்தியை ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, 10 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் வரை பேட்டரி சார்ஜ் செய்ய சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
மேலும், 10 முதல் 97 சதவீதம் வரை சார்ஜ் செய்ய சுமார் 9 நிமிடங்கள் போதுமானது என பிஒய்டி கூறுகிறது. இந்தியாவில் இந்த சார்ஜிங் வேகம் எந்த அளவுக்கு நடைமுறையில் கிடைக்கும் என்பது சார்ஜிங் கட்டமைப்பைப் பொறுத்தே அமையும். செயல்திறனுடன் சேர்த்து பிரீமியம் வசதிகளுக்கும் இசட்9 ஜிடி-யில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் டூயல்-சேம்பர் ஏர் சஸ்பென்ஷன், பின்சக்கர ஸ்டீயரிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, கிராப்-வாக் எனப்படும் தனித்துவமான வாகன இயக்க வசதி அதிகபட்சமாக 15 டிகிரி வரை செயல்படும் என அறியப்படுகிறது. காரின் நீளம் 5.1 மீட்டருக்கும் அதிகமாக இருந்தாலும், பின்சக்கர ஸ்டீயரிங் போன்ற வசதிகள் குறுகிய இடங்களில் காரைத் திருப்புவதற்கும் நகர்ப்புற சாலைகளைக் கையாளுவதற்கும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பெரிய அளவிலான பிரீமியம் காராக இருந்தாலும், ஓட்டுநருக்கு எளிதான கட்டுப்பாட்டை வழங்க டென்சா முயற்சித்துள்ளது.
இந்தியாவில் இசட்9 ஜிடியின் அதிகாரப்பூர்வ விலை மற்றும் இந்தியாவுக்கான முழுமையான சிறப்பம்சங்களை டென்சா இன்று வெளியிடவில்லை. தற்போதைய சந்தை மதிப்பீடுகளின்படி, இதன் விலை சுமார் ரூ.1.10 கோடி முதல் ரூ.1.50 கோடி வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்படுமா, எந்த பேட்டரி மற்றும் சார்ஜிங் அமைப்பு வழங்கப்படும், இந்தியச் சோதனை முறையில் எவ்வளவு ரேஞ்ச் கிடைக்கும் போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிமுகத்தில்தான் தெளிவாகும் இருந்தாலும், 1,156 பிஎஸ் பவர், 1,210 நியூட்டன் மீட்டர் டார்க், 2.7 வினாடிகளில் 100 கி.மீ வேகம் மற்றும் அதிவேக சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் இசட்9 ஜிடி இந்தியாவின் பிரிமியம் எலக்ட்ரிக் கார் சந்தையில் நிச்சயம் கவனம் பெறக்கூடிய மாடலாக இருக்கும்.