
இந்து மதத்தில் பலரும் தமிழ் மாதங்களையே கணக்கிடுவர். 12 தமிழ் மாதங்களில் ஆனி மாதத்தில் மட்டும் 32 நாட்கள் இருக்கிறது. ஆங்கில மாதத்தை பின்பற்றும் பலருக்கும் ஆனி மாதத்தில் 32 நாட்கள் இருப்பதே தெரியாது. தமிழ் மாதங்களிலேயே பெரிய மாதமாக ஆணி விளங்குகிறது. மற்ற மாதங்கள் 30 நாட்களும், 31 நாட்களும் கொண்டுள்ள நிலையில் ஆனி மற்றும் மார்கழி மாதம் இரண்டும் விதிவிலக்காக இருக்கிறது. ஆனியில் 32 நாட்களும், மார்கழியில் 29 நாட்கள் மட்டுமே இருக்கிறது. இதற்கான வானியல் மற்றும் ஜோதிட ரீதியான காரணங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் மாதங்களைப் பொறுத்தவரை, சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் கால அளவை கொண்டு கணக்கிடப்படுகின்றன. மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலமே ஆனி மாதமாகும். வானியலின்படி மிதுன ராசியின் வீச்சு மற்ற ராசிகளை விட சற்று அதிகம். அதாவது சூரியன் மிதுன ராசியை கடந்து செல்வதற்கு மற்ற ராசிகளை கடப்பதை விட கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது. இந்த கூடுதல் நேரம் தான் ஆனி மாதத்திற்கு 32 நாட்களை வழங்குகிறது. ஆனி மாதம் சூரியனின் வடதிசை பயணமான உத்ராயண காலத்தில் கடைசி மாதமாக வருகிறது. உத்திராயணம் என்பது தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், தட்சணாயணம் (ஆடி முதல் மார்கழி வரை) இரவுப் பொழுதாகவும் கருதப்படுகிறது.
அதன்படி பார்த்தால் ஆனி மாதம் தேவர்களின் பகல் பொழுதின் இறுதிப் பகுதியாகும். இதனால் இந்த மாதத்தின் பகல் பொழுது நீண்டதாக இருக்கும். ஆண்டின் மொத்த நாட்களில் 184 நாட்கள் உத்தராயண காலமாகவும், 181 நாட்கள் தட்சணாய காலமாகவும் இருக்கும். இந்த அதிகப்படியான நாட்களை சமன் செய்வதற்காக உத்தராயண காலத்தில் கடைசி மாதமான ஆனி மாதத்தில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனி மாதம் வடமொழியில் ஜேஷ்ட மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு மூத்த அல்லது பெரிய என்று பொருள். இந்த மாதத்தின் சிறப்பு மற்றும் அதிக நாட்களின் எண்ணிக்கையும் இது குறிப்பதாக அமையலாம். தமிழ் மாதங்களின் கணக்கீட்டு முறை, சூரியனின் சஞ்சாரத்தின் அடிப்படையிலேயே நாட்கள் கணக்கிடப்படுகிறது.
அந்த அடிப்படையில் மிதுன ராசியின் தனிப்பட்ட வானியல் அமைப்பு காரணமாக ஆனி மாதம் 32 நாட்களைக் கொண்டிருக்கிறது. தமிழ் மாதங்களின் கணக்கீட்டு முறை, சூரியனின் சஞ்சாரத்தின் தன்மை மற்றும் உத்தராயண காலத்தின் நீளம் போன்ற வானியல் மற்றும் ஜோதிட காரணங்களே ஆனி மாதம் 32 நாட்களைக் கொண்டிருப்பதற்கான காரணங்கள் ஆகும். இது தற்செயலான நிகழ்வு அல்லாமல் நுட்பமான வானியல் கணக்கீடுகளின் அடிப்படையிலான ஒரு அமைப்பாகும்.