பயிர் விளைச்சலுக்கு தேவையான உரங்களை தகுந்த அளவில் இடுவதற்கும் ரசாயன உரங்களின் அளவுக்கு அதிகமான பயன்பாட்டை தடுக்கவும் மண் பரிசோதனை செய்து மண் வளம் அறிய வேண்டியது அவசியம்.
மண் வளம்:
undefined
பொதுவாக மண்ணின் களர், உவர்தன்மை, அமில நிலை, சுண்ணாம்பு அளவு, மண் நயம், மண் ஆழம், இவற்றை அறியாமல் பயிர் செய்வதும், உரமிடுதலும் தவறாகும். நிலத்தில் ஏற்படும் மண் அரிப்பு, வழிந்தோடும் நீர் மற்றும் கரையோட்டம் ஆகியவற்றால் மண்ணின் வளம் குறைந்து விடுவதுண்டு.
இந்த நிலையில் மண் பரிசோதனை மூலம் மண்ணின் ஒவ்வொரு சத்துக்களும் எந்த அளவில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். பின் அந்த மண்ணில் சத்துக்குறைபாடுகளை அறிந்து கொண்டு மண்ணில் சத்துக்களை சரிசம விகித அளவில் நிலை நிறுத்த முடியும்.
இவ்வாறு மண் பரிசோதனை செய்து சத்துக்களை சரியான விகிதத்தில் நிலை நிறுத்துவதன் மூலம் பயிரின் உற்பத்தி மற்றும் லாபத்தை மேம்படுத்தலாம். மண் பரிசோதனை செய்வதால் மண்ணின் தன்மைக்கு ஏற்ப சரியான பயிர் தேர்வு, ரகத்தேர்வு மற்றும் சரியான அளவு உரத்தேர்வு ஆகியவற்றை செய்யலாம்.
மண் மாதிரி சேகரிப்பு:
பயிரிடும் நிலத்து மண்ணை பரிசோதிக்க நிலம் தரிசாக இருக்கும் காலத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும். உரமிட்டவுடன் சேகரிக்கக்கூடாது. பயிர்கள் உள்ள நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கக்கூடாது.
மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து சென்று அந்த பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், நயம், மேலாண்மை முறை, பயிர் சுழற்சி ஆகியவற்றிற்கு தகுந்தாற் போல் பல பகுதிகளாக பிரித்து தனித்தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.
வரப்பு வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகில் உரக்குழிகள், பூஞ்சான் மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக்கூடாது.
சேகரித்த மண் மாதிரியை சுத்தமான ஒரு பாலித்தீன் பையில் போட்டு அதன் மீது மாதிரியை பற்றிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.
உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வைக்கப்பட்டிருந்த பைகள் மண் மாதிரிகள் அனுப்ப உபயோகிக்கக்கூடாது. நுண் ஊட்டங்கள் அறிய பிளாஸ்டிக் மற்றும் மர குச்சிகளை பயன்படுத்தி மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுக்க உலோகங்களை பயன்படுத்தக்கூடாது.
இதுபோன்ற முறைகளை கையாண்டு மண் மாதிரியை பரிசோதனை செய்வதன் மூலம் உரச்செலவை குறைத்து, மண் வளத்தை பாதுகாத்து, அதிக மகசூலை பெறலாம். தற்போது கோடை காலம் மண் மாதிரிகள் எடுப்பதற்கான உரிய தருணம். இந்த சந்தர்ப்பத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.