விளை நிலத்திற்கு வெளியே இருந்து, எந்த ஒரு பொருளையும் பணம் கொடுத்து வாங்கி வந்து பயன்படுத்தாமல் விவசாயம் செய்வதே ‘சுழியம் பட்ஜெட்‘ விவசாயம் எனப்படுகிறது.
அந்த முறையை பின்பற்றி இலாபம் அடைபவர்க நிறைய பேர் உண்டு. இதனால், இடுபொருட்களுக்கான செலவு என்பது அறவே தவிர்க்கப்படுகிறது. ஆள் கூலி போக, விளையும் அனைத்தும் லாபம் தான்.
உரத் தொழிற்சாலை
தோப்பில், ஒவ்வொரு நான்கு தென்னைகளுக்கும் மத்தியில், அம்மரங்களில் இருந்து விழும் காய்ந்த மட்டை, பாளை, ஓலை உள்ளிட்ட கழிவுகள் தொடர்ந்து கொட்டி வரப்படுகின்றன. அதன் மேல், ‘ஸ்பிரிங்க்ளர்’ முறையில் தெளிப்பு பாசனம் அமைக்கலாம்.
அதில் கழிவுகள் தொடர்ந்து நனைந்து, மக்கி, சத்தான உரமாக மாறிவிடுகிறது. இரண்டு ஆண்டுகளாக இந்த முறையை பின்பற்றி வருவதால், தோப்பு முழுக்க ஆங்காங்கே உரம் தயாரிக்கப்பட்டு விடுகிறது.
பண்ணைக்குட்டை
நிலத்தின் கிழக்கு பகுதியில் ஏறத்தாழ, 30 சென்ட் பரப்பளவில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மானியம் பெற, தென்னைகளை வெட்டிவிட்டு, குறிப்பிட்ட அமைப்பில் குட்டை அமைக்க வேண்டும் என்பதால், தென்னைகளுக்கு பாதிப்பின்றி, முழுக்க தன் செலவிலேயே வித்தியாசமான முறையில் அமைத்துள்ளார். சரிவான இக்குட்டையில், ஓடிவரும் மழைநீர் சேகரமாகி, நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரித்து வருகிறது.
பாத்தி இல்லை
பொதுவாக தென்னை மரங்களுக்கு பாத்தி அமைத்து பாசனம் செய்வது தான் வழக்கம். ஆனால் இவரது தோப்பில், எங்குமே பாத்திகளை காண முடிவதில்லை. முழுக்க முழுக்க ‘ஸ்பிரிங்க்ளர்’ பாசனம் தான். இதனால் தோப்பு முழுக்க ‘சில்’ என குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவுவதுடன், தண்ணீரும் வீணாவது இல்லை.
உழவே கிடையாது
இயற்கை வேளாண்மை என்பதால், மண்ணை சற்றே தோண்டியதும், கை நிறைய மண் புழு கிடைக்கிறது. இது போல நிலம் முழுக்க நிறைந்து கிடைக்கும் மண் புழுக்கள், மண்ணை குடைந்து உழவுப்பணியை செய்துவிடுவதுடன், அவற்றின் கழிவுகள் சத்தான உரமாகவும் மாறி மண்ணை வளப்படுத்தி விடுகிறது.
நிறைய விளைச்சல் கிடைக்க வேண்டும் என்று, கண்ட ரசாயனங்களையும் விளைநிலத்தில் கொட்டுவது, போதை மருந்தை உட்கொண்டு, விளையாட்டு போட்டியில் பங்கேற்பதை போலத்தான். அதில் வெற்றி கிடைக்காது; கிடைத்தாலும் நிலைக்காது.
மனிதர்களின் பேராசை தான் அதையெல்லாம் செய்யத் தூண்டுகிறது. இதனால் இயற்கை சீர்கெட்டு, மனிதன் அழிவை சந்திக்கிறான். உயிரோட்டமுள்ள மண்ணை அடித்த தலைமுறைக்கு அளிக்கவே விரும்புங்கள்.
மேலும், ரசாயன விவசாயத்தில் நடக்கும் உற்பத்திக்கு கொஞ்சமும் குறையாமல் இயற்கை முறையிலும் கிடைக்கிறது. ஆனால் இயற்கை முறையில் செலவு இல்லை என்பதால், இதில் தான் லாபம் அதிகம் கிடைக்கும்.
மரத்தின் கழிவுகளை உரமாக்குவதுடன், ஜீவாமிர்தம் மற்றும் மூலிகை பூச்சி விரட்டி ஆகியவற்றை தயாரித்து பயன்படுத்துவதால் நன்கு பலனளிக்கும்.
ஜீவாமிர்தம் தயாரிக்கும் டிப்ஸ்
20 கிலோ மாட்டுச்சாணம், 20 லிட்டர் மாட்டு சிறுநீர், 2 கிலோ கொள்ளு மாவு, 2 கிலோ கரும்பு சர்க்கரை மற்றும் ஒரு கைப்பிடி விளைநிலத்தின் மண்ணை, பீப்பாயில் கொட்டி, நன்கு கலந்து, இரண்டு நாட்கள் ஊறல் போட வேண்டும். அதில் உருவாகம் கலவை தான் ஜீவாமிர்தம். அதை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, பயிர்களின் வேரில் ஊற்றலாம்; இலைவழித்தெளிப்பாகவும் பயன்படுத்தலாம்.
மூலிகை பூச்சி விரட்டி டிப்ஸ்
வேப்பிலை 5 கிலோ, ஆடுதொடா இலை 5 கிலோ, நொச்சி இலை 5 கிலோ, ஊமத்தை இலை 5 கிலோ, எருக்கன் இலை 5 கிலோ ஆகியவற்றை உரலில் இட்டு நன்கு இடித்து, மாட்டு சிறுநீரில் 15 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.அதில் உருவாகும் கரைசல் தான் சக்தி வாய்ந்த மூலிகை பூச்சி விரட்டி. அதை, 10 லிட்டர் தண்ணீருக்கு, 1 லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால், பயிர்களை தாக்கும் பூச்சிகள் நன்கு கட்டுப்படும்.