இளம் பட்டுப் புழுக்களை எப்படி வளர்ப்பது?
1.. முட்டைகளிலிருந்து புழுக்களைப் பிரித்தல்
undefined
முட்டை அட்டையிலிருந்து, புழுக்கள் சீராக பொறிந்து வந்தவுடன் புதிதாகப் பறிக்கப்பட்ட இளம் மல்பெரித் தழைகளை சிறுசிறு சதுரத் துண்டுகளாக (0.5 - 1.0 செ.மீ அளவு) வெட்டி இலைத் துணுக்குகளைப் பரவலாகத் தூவுதல் வேண்டும்.
முட்டை அட்டைகளின் மேல் ஒட்டியிருக்கும் ஒன்றிரண்டு புழுக்களை மெதுவாக இறகால், புழு வளர்ப்புத் தட்டுகளுக்கு மாற்றுதல் வேண்டும்.
புதிதாகப் பொறிக்கப்பட்ட புழுக்களுக்கு உணவளிக்காமல் வெகு நேரம் வைத்திருந்தால் அவை நலிவுற்று விடும்.
2.. இலையின் தரம்
மல்பெரிச் செடியின் துளிரின் கீழே உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது இலைகள் இளம்புழு வளர்ப்பிற்கேற்ற வகையில் புரதம் மற்றும் மாவுச்சத்து மிக்கதாய் உள்ளன. நன்கு பராமரிக்கப்ட்ட தோட்டங்களில் போதிய அளவு இயற்கை உரம் அளிப்பதால் சத்து மிக்க இலைகள் கிடைக்கின்றன.
இளம்புழு வளர்ப்பில் தழைகளின் ஈரப்பதத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். மல்பெரித் தழைகளை எப்போதும் இளங்காலை அல்லது மாலை நேரங்களில் பறிக்க வேண்டும். தழைகளைத் தகுந்த இலைப் பாதுகாப்பு பெட்டிகளில் வைத்து சுத்தமான ஈரத்துணியைக் கொண்டு மூடி பாதுகாக்க வேண்டும்.
3.. உணவளித்தல், சுத்தம் செய்தல்
பருவ நிலைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று முறை இளம்புழுக்களுக்கு சீரான கால இடைவெளியில் உணவளிக்க வேண்டும். புழுக்களின் வளர்ச்சிக்கேற்ப இலைத் துணுக்குகளின் அளவை அதிகமாக்கிக் கொள்ளலாம்.
4.. தோலுரிப்பின் போது இளம்புழுக்களைக் கையாள்வது
இளம்புழுக்கள் மூன்று நாட்கள் கழித்து தோலுரிப்பும். அதற்கடுத்த மூன்ற தினங்களில் இரண்டாம் தோலுரிப்பும் முடிந்து மூன்றாம் பருவத்தை அடையும். தோலுரிப்பு சமயத்தில் வளர்ப்பு படுக்கைகளை நன்கு உலர வைக்க வேண்டும். தோலுரிப்பின் போது நல்ல காற்றோட்டமாகவும். சலனமடையாமலும் வைத்திருக்க வேண்டும்.
5.. இளம்புழு வளர்ப்பு மையங்கள்
பட்டுப்புழு விவசாயிகள், தங்கள் தேவைக்கேற்ப முட்டைகளை வாங்கி வந்து புழுக்களை வளர்க்கின்றனர். இளம்புழு வளர்ப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் பல விவசாயிகளால் பல திடகாத்திரமான இளம்புழுக்களை வளர்க்க முடிவதில்லை.
தவிரவும் இளம்புழு வளர்ப்பறைகளில், காற்றோட்டம், தட்ப வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றை சீராக பராமரிக்க உபகரணங்கள் தேவை. ஆகவே நல்ல முறையில் இளம்புழுக்களை வளர்க்க, இளம்புழு வளர்ப்பு மையங்கள் ஒரு மாற்று வழியாகும்.
தற்போது அரசாங்க மானியம் பெற்று, பலதொழில் முனைவர்கள், இளம்புழு வளர்ப்பு மையங்களை அமைத்து விவசாயிகளுக்கு ஆரோக்கியமான மூன்றாம் நிலை புழுக்களை விநியோகம் செய்து வருகின்றனர்.
இதனால் பட்டுப்புழுக்களின் வளர்ச்சி மேன்மையுற்று பட்டு மகசூலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.