** ஆடுகளுக்கு அடையாளம் இடுதல்
ஆடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்கும் போது சரியான பராமரிப்பு முறைகளைக் கையாளுவதற்கு அடையாளம் இடுவது அவசியம் ஆகும். இவற்றை 3 முறைகளில் செய்யலாம்.
1. காதுகளில் பச்சைக் குத்தி எழுத்துக்களைப் பொறித்தல்
2. வாலில் பச்சை குத்துதல்
3.காதுகளில் உலோகம் அல்லது பிளாஸ்டிக்குளால் ஆன அடையாள அட்டைகளை மாட்டுதல்
போன்ற முறைகளைக் கையாளலாம். இவை ஒவ்வொரு ஆடு பற்றி விபரப் பதிவேடுகளை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
** கொம்பு நீக்கம் செய்தல்
கொம்பு நீக்கம் செய்வதால் ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் காயப்படுத்திக் கொள்வதைத் தடுக்க இயலும். கொம்பு உடைதல், கொம்புகளினால் ஏற்படும் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க இயலும்.
கிடாக்குட்டிகள் பிறந்து 2-5 நாட்களுக்குள்ளும், பெட்டைக்குட்டிகளுக்கு 12 நாட்களுக்குள்ளும் கொம்பு நீக்கம் செய்தல் வேண்டும். நீக்கம் செய்யப்படவேண்டிய பகுதியைச் சுற்றியு்ள முடிகளை நீக்கிவிட்டு பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவவேண்டும்.
காஸ்டிக் சோடா அல்லது பொட்டாஷ் கொண்டு கொம்பு வளரும் பகுதி புண்ணாகும் வரை நன்கு தேய்க்கவேண்டும். எக்காரணம் கொண்டும் காஸ்டிக் சோடா அல்லது பொட்டாஸ் கண்களில் படக்கூடாது.
மின்சார கொம்பு நீக்கியைப் பயன்படுத்துதல் சிறந்தது. குட்டியின் வாயை அடைக்கும் போது, அது மூச்சு விட ஏற்றவாறு அடைக்கவேண்டும். அல்லது மூச்சுத் திணறல் ஏற்படலாம். வயது முதிர்ந்த ஆடுகளில் செய்யும் போது வளர்ந்து விட்ட கொம்புகளை இரம்பம் கொண்டு அறுத்துவிடவேண்டும்.
இவ்வாறு செய்யும் போதே ஈக்கள் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.